திட்டக்குடியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 570 பேருக்கு பணிநியமன ஆணை அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்


திட்டக்குடியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 570 பேருக்கு பணிநியமன ஆணை அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்
x
தினத்தந்தி 4 Dec 2021 9:08 PM IST (Updated: 4 Dec 2021 9:08 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 570 பேருக்கு பணிநியமன ஆணையை அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.

திட்டக்குடி, 

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் ஆகியன சார்பில் வேலை வாய்ப்பு முகாம் திட்டக்குடி ஞானகுரு வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது. 

இதற்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவ ராவ், தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்க இயக்குனர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

திருச்சி மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன் வரவேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் சி.வெ. கணேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

570 பேருக்கு பணி ஆணை

முகாமில் 141 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றனர். இதில் கடலூர், விருத்தாசலம், பண்ருட்டி, வேப்பூர், நெய்வேலி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள்  ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

முகாமில், பல்வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்ற 570 பேருக்கு பணிநியமனத்துக்கான ஆணையை அமைச்சர் சி.வெ. கணேசன் வழங்கினார்.

மேலும் 938 பேர் 2-ம் கட்ட தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர், 101 இளைஞர்கள் திறன் பயிற்சிக்காக பதிவு செய்தனர். 272 பேர் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு பதிவு செய்தனர்.

இதில் எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன்,  வருவாய் துறை கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங், வளர்ச்சிப் திட்ட பணி கூடுதல் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர், பள்ளி தாளாளர் கோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

11 வேலைவாய்ப்பு முகாம்கள்

முன்னதாக அமைச்சர் சி.வெ. கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் 11 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில் 11 ஆயித்து 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று இருக்கிறார்கள்.

அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர் நல வாரியத்திற்கு வேண்டிய நலத்திட்ட உதவிகளை எதுவும் வழங்காத நிலையில், தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின்  பதவியேற்ற உடன் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.


தொடர் கனமழையால் மங்களூர், நல்லூர் உள்ளிட்ட ஒன்றியங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, சோளம், மரவள்ளி, வரகு, நெல், உளுந்து, மஞ்சள், உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.  மாவட்ட கலெக்டர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்கவேண்டும் என்று தெரிவித்தார். 

இதில், திட்டக்குடி தாசில்தார் தமிழ்ச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பட்டூர் அமிர்தலிங்கம், செங்குட்டுவன், சின்னசாமி, நகர செயலாளர் பரமகுரு, நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் மன்னன், ஓம்சக்தி இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எக சானலி நன்றி கூறினார்.

Next Story