பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு சாகச பயணம் செய்த மாணவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
திண்டுக்கல்லில் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு சாகச பயணம் செய்த மாணவர்களை போலீசார் எச்சரித்தனர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் செய்கின்றனர். இதனால் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது. எனவே பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்யும் மாணவர்கள் மற்றும் வாலிபர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் திண்டுக்கல் உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் மேற்பார்வையில், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலைப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சில் மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்ததை போலீசார் பார்த்தனர். உடனே பஸ்சை நிறுத்திய போலீசார், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள் மற்றும் வாலிபர்களை திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் மாணவர்களின் பெற்றோர்களையும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அதையடுத்து மாணவர்களை பெற்றோர் முன்னிலையில் நிறுத்திய போலீசார், இனிவரும் காலங்களில் பஸ் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தால் சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story