குஜிலியம்பாறையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்


குஜிலியம்பாறையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Dec 2021 9:26 PM IST (Updated: 4 Dec 2021 9:26 PM IST)
t-max-icont-min-icon

குஜிலியம்பாறையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ஆனால் நகர் பகுதியில் மழைநீர் வடிந்துசெல்ல வடிகால் வசதி செய்யப்படவில்லை. இதனால் தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்பதுடன் குடியிருப்புகளுக்குள்ளும் புகுவது வாடிக்கையாகிவிட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக காளியம்மன் கோவில் தெருவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. அப்பகுதியை சேர்ந்த சிலர் தங்கள் வீடுகள் முன்பு உள்ள சாலையை ஆக்கிரமித்து மணலை கொட்டி வைத்ததால் தான் தண்ணீர் வழிந்தோடாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்ததாக தெரிகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள் பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமியிடம் நேற்று காலையில் புகார் தெரிவித்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு சாலையை ஆக்கிரமித்து கொட்டப்பட்ட மணலை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர்கள் கூறியபடி மணலை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. 
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் கரூர்-திண்டுக்கல் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்ததும் குஜிலியம்பாறை தாசில்தார் சரவணகுமார், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சாலையை ஆக்கிரமித்து கொட்டப்பட்ட மணலை அகற்றினர். அதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story