‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x
தினத்தந்தி 4 Dec 2021 4:56 PM GMT (Updated: 4 Dec 2021 4:56 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

செடிகள் அகற்றப்படுமா?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் அடையாளமாக ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் ராஜகோபுரம் கம்பீரமாக பிரம்மிப்பூட்டும் வகையில் அழகான சிற்பங்கள் அமைந்து இருக்கும். இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அதன் கோபுரம் முழுவதும் செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சி அளிக்கிறது. இதனால் வேர்கள் ஊடுருவி கோவிலின் சிற்பங்களை சேதப்படுத்தி விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், மன்னார்குடி.

கூடுதல் பஸ் இயக்க வேண்டும்

காரைக்கால் மாவட்டத்தில் காலை மற்றும் மாலை நேரத்தில் குறைவான அரசு பஸ்கள் தான் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகிறார்கள். ஒரு சிலர் பஸ்சில் இருந்து கீழே தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளனர். வேலைக்கு செல்வோரும் பயணிப்பதால் பஸ்களில் கூட்டம் அலை மோதுகிறது. இதனால் பஸ்களில் பல முறை திருட்டு சம்பவங்கள் நடந்து உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், திருநள்ளாறு.

மின் கம்பம் அப்புறப்படுத்தப்படுமா?

திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள பின்னவாசல் கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலில் பல மின் கம்பங்கள் விழுந்தன. அதன் பிறகு புதிய மின் கம்பங்கள் நடப்பட்டு மின்சார வினியோகம் கொடுக்கப்பட்டது. ஆனால் கீழே சாய்ந்து விழுந்த மின் கம்பங்கள் இன்று வரை ஒரு மின் கம்பம் கூட அகற்றப்படவில்லை. இது குறித்து மின் வாரியத்தில் பல முறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை. சாய்ந்த மின்கம்பத்தில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. ஒரு சில இடங்களில் வீட்டு வாசலில் அப்படியே கிடக்கின்றன. இதனால் வீட்டில் இருக்கும் குழந்தைகளும் தடுமாறி விழுந்து விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கீழே விழுந்த மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கண்ணன், பின்னவாசல்.

Next Story