திருச்செங்கோடு, எலச்சிபாளையம் பகுதிகளில் கனமழை: உழவர் சந்தைக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் அவதி


திருச்செங்கோடு, எலச்சிபாளையம் பகுதிகளில் கனமழை: உழவர் சந்தைக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 4 Dec 2021 10:31 PM IST (Updated: 4 Dec 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு, எலச்சிபாளையம் பகுதிகளில் கனமழை: உழவர் சந்தைக்குள் தண்ணீர் புகுந்தது பொதுமக்கள் அவதி

எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு, எலச்சிபாளையம் பகுதிகளில் பெய்த கனமழையால் திருச்செங்கோடு உழவர் சந்தைக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
கனமழை
திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் அடித்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்ய தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 11 மணி வரை திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வேளாளர் காலனி பகுதியில் ஏரி போல் தண்ணீர் தேங்கியது. 
புதிய பஸ் நிலையம் அருகே உள்ள உழவர் சந்தையில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீர் கலந்து உள்ளே சென்றதால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இதனால் உழவர் சந்தை தீவு போல காட்சியளித்தது மேலும் காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து சென்று காய்கறிகளை சிரமப்பட்டு வாங்கி சென்றனர். ஈரோடு சாலையின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இடுப்பளவுக்கு தண்ணீர் வந்ததால் அந்த பகுதி பொதுமக்கள் அவதி அடைந்தனர். வேளாளர் காலனி பகுதியில் ஒருவரது வீட்டுக்கு உறவினராக வந்த ஒரு மூதாட்டி தண்ணீர் தேங்கியதால் ஊருக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டார். 
ஆரம்ப சுகாதார நிலையம்
இதுகுறித்து தகவலறிந்த திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று மாடியில் நின்ற மூதாட்டியை தோளில் சுமந்து சாலைக்கு கொண்டு வந்தனர். மேலும் கனமழைக்கு திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை தண்ணீர் சூழ்ந்தது. அலுவலகத்திற்கு செல்லும் வழியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தண்ணீர் வடியும் வரை யாரும் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இதேபோல் எலச்சிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதையொட்டி சின்ன எலச்சிபாளையம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உப்புக்குட்டை ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர் ஓடை வழியாக சென்று மாணிக்கம்பாளையம் நெடுஞ்சாலை செல்லும் பாய்ந்தோடி தரைப்பாலத்தை மூழ்கடித்தது. இதனால் எலச்சிபாளையம் வழியாக மாணிக்கம்பாளையம் செல்லும் பாதை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவுவாயிலில் தண்ணீர் தேங்கி நின்றது. 
எம்.எல்.ஏ. ஆய்வு
 இதுகுறித்து தகவலறிந்த பரமத்திவேலூர் சேகர் எம்.எல்.ஏ. சின்ன எலச்சிபாளையம் பகுதிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தண்ணீர் புகாமல் இருக்க என்ன செய்யலாம் என பொதுமக்களிடம் கருத்து கேட்டார். இந்த ஆய்வின்போது எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சக்திவேல் உடன் இருந்தார்.

Next Story