3 நாட்களுக்கு பிறகு கனமழை; தூத்துக்குடியில் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்
தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று கனமழை பெய்ததால் மீண்டும் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு நேற்று கனமழை பெய்ததால் மீண்டும் வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.
கனமழை
தூத்துக்குடி மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாநகரில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டனர். கடந்த 3 நாட்களாக மழை இல்லை. வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் கிடந்தது.
வெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்
ஏற்கனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது.
மேலும், நேற்று பெய்த மழையால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளான கே.டி.சி. நகர், காமராஜர் நகர், முல்லை நகர், முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரகுமத் நகர், குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், இந்திரா நகர், தேவர் காலனி, அய்யப்பன் நகர், கதிர்வேல் நகர், அன்னை தெரசா நகர், ஸ்டேட் வங்கி காலனி, அம்பேத்கர் நகர், பூப்பாண்டியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கின்றது. இதனால் அந்த பகுதி மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள். ஒரு சிலர் வீடுகளை காலி செய்து வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இதனால் ெபாதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும் மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் மின் மோட்டார்களை வைத்து மழை நீரை வெளியேற்றி வருகிறார்கள்.
Related Tags :
Next Story