தஞ்சை அண்ணாசிலை பகுதியில் கடைகள் இடிப்பு
தஞ்சை அண்ணாசிலை பகுதியில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டன. மேலும் இங்குள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி அதில் நடைபாதையுடன் புதிதாக கட்ட மாநகராட்சி பணிகளை தொடங்கி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை அண்ணாசிலை பகுதியில் உள்ள கடைகள் இடிக்கப்பட்டன. மேலும் இங்குள்ள மழைநீர் வடிகால் தூர்வாரி அதில் நடைபாதையுடன் புதிதாக கட்ட மாநகராட்சி பணிகளை தொடங்கி உள்ளது.
வியாபாரிகள் எதிர்ப்பு
தஞ்சை அண்ணா சிலை பகுதியில் 54 கடைகள் செயல்பட்டு வந்தன. இங்கு செருப்பு கடை, துணிக்கடை, செல்போன் பழுது பார்க்கும் கடைகள், உணவகம், தேனீர் கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வந்தன. இந்த கடைகள் அனைத்தும் மழைநீர் வடிகால் வாய்க்கால் மீது கட்டப்பட்டுள்ளது எனவும் இந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மாநகராட்சி வலியுறுத்தியது.
ஆனால் வியாபாரிகள் கடைகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஏற்கனவே இருக்கும் கடைகளுக்கு பின்பகுதியில் கடைகள் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தினர். இந்த நிலையில் இந்த கடைகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பை மாநகராட்சி அதிகாரிகள் துண்டிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
கடைகள் இடிப்பு
இதனால் வியாபாரிகள் கடைகளை அடைத்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 நாட்களாக இந்த காத்திருப்பு போராட்டம் நீடித்தது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள், வியாபாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சரபோஜி மார்க்கெட் பகுதியில் கடைகள் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு வியாபாரிகளும் சம்மதம் தெரிவித்து கடைகளை காலி செய்தனர்.
வியாபாரிகள் கடைகளை காலி செய்ததை தொடர்ந்து நேற்று அதிகாலை முதல் கடைகள் இடிக்கும் பணிகள் தொடங்கின. அதன்படி அண்ணா சிலை அருகில் இருந்து ஜூபிடர் தியேட்டர் வரை உள்ள கடைகள் இடிக்கக்கப்பட்டு வருகின்றன. மேலும் இடிக்கப்படும் கட்டிடங்கள் உடனடியாக பொக்லின் எந்திரம் உதவியுடன் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.
நடைபாதை அமைப்பு
இந்த நிலையில் மழைநீர் வடிகால் வாய்க்காலையும் பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரினர். இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், உதவி பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில், வியாபாரிகள் கடைகளை காலி செய்ததை தொடர்ந்து கடைகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. கடைகளுக்கு அடியில் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்கால் 10 அடி அகலம், 10 அடி ஆழத்திற்கு உள்ளது. இந்த வாய்க்காலில் இருந்த மண் தூர்வாரப்பட்டு உள்ளது. இந்த வாய்க்கால் மீண்டும் கட்டப்பட்டு, இதில் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் நடைபாதை தடுப்புக்கம்பிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இந்த சாலையின் எதிர்புறமும் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்படுகிறது. மெத்தம் 19 மீட்டர் கொண்ட இந்த சாலையின் மையப்பகுதியில் மைய தடுப்புச்சுவர் மற்றும் விளக்குகளும் அமைக்கப்படுகின்றன என்றார்.
Related Tags :
Next Story