கன்னட நடிகர் சிவராம் மரணம்
வீட்டில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்த கன்னட நடிகர் சிவராம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நடிகர்-நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு: வீட்டில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயமடைந்த கன்னட நடிகர் சிவராம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, நடிகர்-நடிகைகள் அஞ்சலி செலுத்தினர்.
வீட்டில் வழுக்கி விழுந்தார்
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் சிவராம். அவருக்கு வயது 83. சிவராம், கன்னட திரையுலகில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல துறையிலும் சிறந்து விளங்கியவர். 1985-ம் ஆண்டு பெரத ஜீவ என்ற கன்னட படத்தில் நடித்தார். அதன்பிறகு, பல்வேறு படங்களில் சிவராம் நடித்திருந்தார். பெங்களூரு தியாகராஜநகரில் நடிகர் சிவராம் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டில் அய்யப்ப பூஜைக்கான வேலையில் சிவராம் ஈடுபட்டு இருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
நடிகர் சிவராம் மரணம்
ஆனால் அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மதியம் நடிகர் சிவராம் மரணம் அடைந்தார். பின்னர் நடிகர் சிவராம் உடல், மருத்துவமனையில் இருந்து தியாகராஜநகரில் உள்ள, அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு கன்னட திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, தியாகராஜ நகருக்கு சென்று நடிகர் சிவராம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார். இதுபோல், மந்திரி ஆர்.அசோக்கும் சிவராம் உடலுக்கு செலுத்தினார். இதுதவிர நடிகர் சிவராஜ்குமார், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே, நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், அரசியல் தலைவர்கள் நடிகர் சிவராம் உடலுக்கு அஞ்சலு செலுத்தினார்கள்.
இன்று இறுதி சடங்கு
மேலும் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் அஸ்வத் நாராயண், ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் நடிகர் சிவராம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சிவராம் கடந்த 1938-ம் ஆண்டு ஜனவரி 28-ந் தேதி பிறந்திருந்தார். கடந்த 2013-ம் ஆண்டு மத்திய அரசு, நடிகர் சிவராமுக்கு பத்மபூஷண் விருது வழங்கி கவுரவித்திருந்தது. மேலும் கர்நாடகத்தில் டாக்டர் ராஜ்குமார் பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றுள்ளார்.
நடிகர் ராஜ்குமார் நடித்திருந்த நான் ஒரு கல்லா படத்தையும் நடிகர் சிவராம் தயாரித்திருந்தார். நடிகர் ராஜ்குமாருடன் இணைந்து பல்வேறு படங்களில் அவர் நடித்திருக்கிறார். நடிகர் சிவராமின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணியில் இருந்து காலை 10 மணிவரை ரவீந்திர கலாசேத்ராவில் வைக்கப்பட உள்ளது. பின்னர் காலை 11 மணியளவில் பனசங்கரியில் நடிகர் சிவராமின் இறுதி சடங்கு நடைபெற இருக்கிறது.
Related Tags :
Next Story