தக்காளி, கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ தாண்டியது
மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி, கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்கிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை,
மதுரை மார்க்கெட்டுகளில் தக்காளி, கத்தரிக்காய் கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்கிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
கனமழை
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளது. இதுபோல், வெளிமாநிலங்களிலும் கனமழை பெய்வதால் காய்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இந்த காரணங்களால் கடந்த 2 வாரங்களாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக தக்காளியின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.150 வரை சென்றது. அதன்பின்னர் படிப்படியாக வரத்து அதிகரித்ததை தொடர்ந்து தக்காளியின் விலை கடந்த சில தினங்களாக கிலோ ரூ.50 முதல் ரூ.70-க்கு விற்பனையானது.
இந்தநிலையில் நேற்று மீண்டும் தக்காளியின் விலை அதிகரித்தது. அதன்படி, மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் தக்காளி மொத்த விலையில் 15 கிலோ பெட்டி ரூ.800 முதல் ரூ.1200 வரை விற்பனையானது. இதனால், சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.110 வரை இருந்தது. இதுபோல், சிறு, சிறு கடைகள், மார்க்கெட்டுகளிலும் தரத்திற்கு ஏற்ப தக்காளியின் விலை கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனையானது.
கத்தரிக்காய் விலை
இதுபோல், மொத்த விலையில் கத்திரிக்காயின் விலையும் அதிகமாக இருந்தது. நேற்று, மொத்த விலையில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.80 முதல் ரூ.120 வரை விற்பனையானது. இதுபோல் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40, கேரட் ரூ.50, பட்டர்பீன்ஸ் ரூ.180, ஜெர்மன்பீன்ஸ் ரூ.70, சோயாபீன்ஸ் ரூ.100, ரிங் பீன்ஸ் ரூ.80, முருங்கை பீன்ஸ் ரூ.100, பீட்ருட் ரூ.40, முள்ளங்கி ரூ.50, நூல்கோல் ரூ.60, டர்னிப் ரூ.50, முருங்கைக்காய் ரூ.150, பீர்க்கங்காய் ரூ.60 முதல் ரூ.80, உருளைக்கிழங்கு ரூ.30, காலிபிளவர் ரூ.30 முதல் ரூ.50 வரை (ஒன்றின் விலை), வெண்டைக்காய் ரூ.70 முதல் ரூ.80, சுரைக்காய் ரூ.40 முதல் ரூ.50, புடலங்காய் ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
தற்போது மழைக்காலமாக இருப்பதால் காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும், மழைக்காலம் முடியும் வரை அதாவது பொங்கல் பண்டிகை நெருங்கும் வரை காய்கறிகளின் விலை இதேபோல் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
காய்கறிகளின் விலை கிடுகிடு உயர்வால் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தங்கம் வாங்குவது போல தக்காளிகளை கடைகளில் பார்த்து, பார்த்து வாங்கினர். வியாபாரிகளும் தங்கம் விலையை போல தக்காளி விலை அதிகரித்து விட்டதாக கூறினர். இது குறித்து இல்லத்தரசிகள் கூறும் போது, காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளதால் ஒருவேளை சாம்பார் வைப்பதற்கே காய்கறிகளுக்கே 200 ரூபாய்க்கு மேல் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலானோர் சைவ உணவுகளை சமைக்க வேண்டிய நிலை உள்ளதால் வீட்டு பட்ஜெட்டில் காய்கறிகள் வாங்குவதற்காக ஒரு பெருந்தொகையை ஒதுக்க வேண்டிய நிலை உள்ளது என்று கவலையுடன் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story