2-வது நாளாக காங்கிரசார் சாலை மறியல்
நித்திரவிளை அருேக வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றக் கோரி காங்கிரசார் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொல்லங்கோடு:
நித்திரவிளை அருேக வீடுகளில் புகுந்த வெள்ளத்தை வெளியேற்றக் கோரி காங்கிரசார் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வீடுகளில் புகுந்த வெள்ளம்
நித்திரவிளை அருகே உள்ள ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட கிராத்தூர், வலியமக்குளி, மணவிளை போன்ற பகுதிகளில் மழையால் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இந்த வெள்ளத்தை அகற்ற கோரி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் நேற்று முன்தினம் இரவு மேற்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நேற்று காலை 10 மணிக்குள் வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
2-வது நாளாக மறியல்
ஆனால் நேற்று காலையில் சீரமைப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை எனத்தெரிகிறது. இதைகண்டித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் 2-வது நாளாக மறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் தாரகை கத்பர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மாநில பொதுச்செயலாளர் பால்ராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் கோபன், இளைஞரணி துணை தலைவர் விமல், ஜான் பெனடிக்ட், அசோகன் மற்றும் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.
கஞ்சி காய்ச்சினர்
ஒருகட்டத்தில் பொதுமக்கள் சிலர் போராட்டக்களத்தில் கஞ்சி காய்ச்ச தொடங்கினர். இதையடுத்து கிள்ளியூர் தாசில்தார் திருவாழி மற்றும் ஏழுதேசம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜான்சன் சம்பவ இடத்துக்கு சென்று வீடுகளில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்காக ஊழியர்கள் மூலம் மின்சார மோட்டாரை பயன்படுத்தி வெள்ளத்தை வெளியேற்றும் பணி நடந்தது. இதையடுத்து காங்கிரசார் போராட்டத்தை கைவிட்டனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story