வாகன ஓட்டிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் அபராத தகவல் அனுப்பும் திட்டம்
போக்குவரத்து விதிகளை மீறுவது பற்றி வாகன ஓட்டிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பி வைக்கும் திட்டம் பெங்களூருவில் நேற்று முதல் தொடங்கப்பட்டது.
பெங்களூரு: போக்குவரத்து விதிகளை மீறுவது பற்றி வாகன ஓட்டிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பி வைக்கும் திட்டம் பெங்களூருவில் நேற்று முதல் தொடங்கப்பட்டது.
அபராதம்
கர்நாடகத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் போலீசார் போக்குவரத்து விதிகளை கடுமையாக்கி உள்ளனர். நகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுபவர்கள், சிக்னலில் நிற்காமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
சில இடங்களில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனங்களை போலீசார் செல்போனில் புகைப்படம் எடுத்து கொள்கிறார்கள். அதன்மூலம் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் தபால் மூலம் வாகன ஓட்டிகளின் வீடுகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை மீறியது பற்றியும், அதற்கான அபராதம் பற்றியும் போலீசார் தகவல் அனுப்பி வருகிறார்கள்.
வாட்ஸ்-அப் மூலம்...
இந்த நிலையில் வாகன ஓட்டிகள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்வதால் அவர்களது முகவரி மாறுகிறது. இதனால் அவர்களுக்கு அந்த தபால் கிடைக்காமல் போய் விடுகிறது. மேலும் ஒரு தபாலுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை செலவு ஆவதாகவும் சொல்லப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு தபால் கிடைக்காத பட்சத்தில் அவை போலீசாருக்கே திருப்பி வந்து விடுகின்றன. இதனால் அரசுக்கு நஷ்டமும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பும் திட்டம் பெங்களூருவில் நேற்று முதல் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு உடனடியாக அவர்கள் செய்த விதிமீறல் குறித்து புகைப்படத்துடன் தகவல் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
இதன்மூலம் வாகன ஓட்டிகளிடம் இருந்து எளிதாக அபராதம் வசூலிக்க முடியும் என்றும், போக்குவரத்து போலீசாரின் பணிச்சுமை குறைவதுடன், அரசுக்கும் பணம் மிச்சமாகும் என்றும் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனர் ரவிகாந்தேகவுடா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story