வருகிற 13-ந்தேதி முதல் துமகூரு-சிவமொக்கா இடையே முன்பதிவில்லா பயணிகள் ரெயில் ஓடும்


வருகிற 13-ந்தேதி முதல் துமகூரு-சிவமொக்கா இடையே முன்பதிவில்லா பயணிகள் ரெயில் ஓடும்
x
தினத்தந்தி 5 Dec 2021 2:37 AM IST (Updated: 5 Dec 2021 2:37 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு-சிவமொக்கா இடையே முன்பதில்லா பயணிகள் ரெயில் வருகிற 13-ந்தேதி முதல் இயங்க உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சிவமொக்கா: துமகூரு-சிவமொக்கா இடையே முன்பதில்லா பயணிகள் ரெயில் வருகிற 13-ந்தேதி முதல் இயங்க உள்ளதாக தென்மேற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. 

நீண்ட நாள் கோரிக்கை

துமகூரு-சிவமொக்கா இடையே முன்பதிவில்லா பயணிகள் ரெயில் இயக்க வேண்டும் என்று மக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் ஏழை-எளிய மக்களின் வசதிக்காகவும், மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று துமகூரு-சிவமொக்கா இடையே முன்பதிவில்லா பயணிகள் ரெயிலை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. 
வருகிற 13-ந்தேதி முதல் இந்த ரெயில் இயங்க உள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

துமகூரு-சிவமொக்கா

துமகூரு-சிவமொக்கா முன்பதிவில்லா பயணிகள் ரெயில் (வண்டி எண்: 06591) வருகிற 13-ந்தேதி முதல் தினமும் மாலை 6.40 மணிக்கு துமகூருவில் இருந்து புறப்பட்டு இரவு 11.50 மணிக்கு சிவமொக்காவை சென்றடையும். 
மறுமார்க்கமாக சிவமொக்கா-துமகூரு முன்பதிவில்லா பயணிகள் ரெயில் (06592) வருகிற 14-ந்தேதி முதல் தினமும் காலை 4 மணி மணிக்கு சிவமொக்காவில் இருந்து புறப்பட்டு காலை 9.25 மணிக்கு துமகூருவை சென்றடையும். 

இந்த ரெயில் இருமார்க்கமாகவும் ஹெக்கரே ஹால்ட், மல்லசந்திரா, குப்பி, நிட்டூர், சம்பிகே ரோடு, பானசந்திரா, அரலேகுப்பே ஹால்ட், ஹரடி, பனசங்கரை ஹால்ட், திப்தூர், ஸ்ரீசாரதா நகர் ஹால்ட், ஒன்னாவள்ளி ரோடு, ஆதிஹள்ளி, அரிசிகெரே, பானாவர், தேவனூர், பெல்லகெரே ஹால்ட், கடூர், பீரூர், சிவப்பூர், கரனஹள்ளி, தரிகெரே, மாசரஹள்ளி, பத்ராவதி, சிவமொக்கா ஹால்ட், சிவமொக்கா டவுன் வழியாக செல்லும். 
மொத்தம் 12 பெட்டிகளுடன் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது. இதில் 10 பொது பெட்டியும், 2 சரக்கு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். 

நீட்டிப்பு

இதேபோல், சாம்ராஜ்நகர்-கே.எஸ்.ஆர். பெங்களூரு- சாம்ராஜ்நகர் முன்பதிவில்லா பயணிகள் ரெயில் (07346/07346) துமகூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துமகூரு வரை நீட்டிக்கப்பட்ட இந்த ரெயில் வருகிற 13-ந்தேதி முதல் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story