எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழையால் 200 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் ரேஷன்கடைகளிலும் மழைநீர் புகுந்ததால் பொருட்கள் சேதம்


எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டித்தீர்த்த கன மழையால் 200 வீடுகளை சூழ்ந்த வெள்ளம் ரேஷன்கடைகளிலும் மழைநீர் புகுந்ததால் பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 5 Dec 2021 2:42 AM IST (Updated: 5 Dec 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இரவில் கொட்டித்தீர்த்த கனமழையால் 200 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ரேஷன்கடைகளிலும் மழைநீர் புகுந்ததால் பொருட்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

எடப்பாடி,
கொட்டித் தீர்த்த கனமழை
சேலம் மாவட்டத்தில், எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் எடப்பாடி தாலுகா அலுவலகம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து நின்றது.
ஒரே நாள் இரவில்  கொட்டித்தீர்த்த கனமழையால், குரும்பம்பட்டி ஊராட்சியில் உள்ள குரும்பம்பட்டி, புங்கனேரி, வேம்பனேரி ஆகிய ஏரிகள் நிரம்பின. இதையடுத்து இந்த ஏரிகளில் இருந்து பெருக்கெடுத்து சென்ற உபரிநீர் காரணமாக, ரங்கம்பாளையம், தானமுத்தியூர், நாச்சியூர் ஆகிய தாழ்வான பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்தது.
மேலும் அந்த பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்தை வனத்துறையினர் நிறுத்தினர். மேலும் மாற்றுப்பாதையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. 
பள்ளிக்கு விடுமுறை
பெரியநாச்சியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தண்ணீர் சூழ்ந்ததால் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. பெரியநாச்சியூர் மற்றும் தானமுத்தியூர் பகுதிகளில் உள்ள 2 ரேஷன் கடைகளில் தண்ணீர் புகுந்ததால் அரிசி, பருப்பு, சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்கள் வைக்கப்பட்டிருந்த மூட்டைகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
குரும்பம்பட்டியில் இருந்து குச்சிக்கல் கரடு செல்லும் சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் தார் சாலை முற்றிலும் சேதமடைந்து அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
இதேபோல் நேற்று முன்தினம் இரவில் பெய்த பலத்தமழையால், கொங்கணாபுரம் கச்சராயன்குட்டை ஏரி கடந்த 50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. நள்ளிரவில் ஏரி நிரம்பிய நிலையில் உபரிநீர், சங்ககிரி-ஓமலூர் பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
பயிர்கள் சேதம்
கனமழையின் காரணமாக பூலாம்பட்டி, பக்கநாடு, இருப்பாளி, கொங்கணாபுரம், போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல், கரும்பு, பருத்தி, சோளம், மரவள்ளிக்கிழங்கு, புதினா, கொத்தமல்லி, போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் பில்லுக்குறிச்சி பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 5 ஏக்கருக்கும் மேலான நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கியதால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்தனர். 
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் வேடியப்பன், எடப்பாடி நகராட்சி ஆணையாளர் சேகர் ஆகியோர் பார்வையிட்டு தண்ணீரை வடிய செய்ய வைக்கும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள பணியாளர்களை அறிவுறுத்தினர்.

Next Story