ஓசூரில் இருந்து மதுரைக்கு கடத்தல்: ரூ.14 லட்சம் குட்காவுடன் மினி லாரி பறிமுதல் டிரைவர் கைது


ஓசூரில் இருந்து மதுரைக்கு கடத்தல்: ரூ.14 லட்சம் குட்காவுடன் மினி லாரி பறிமுதல் டிரைவர் கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 2:59 AM IST (Updated: 5 Dec 2021 2:59 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் இருந்து மதுரைக்கு மினி லாரியில் கடத்தப்பட்ட ரூ.14 லட்சம் மதிப்பிலான குட்காவை சேலம் அருகே போலீசார் பறிமுதல் செய்தனர். மினி லாரி டிரைவரும் கைது செய்யப்பட்டார்.

ஓமலூர்
குட்கா கடத்தல்
சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த ஜோடுகுளி புளிசாத்து முனியப்பன் கோவில் அருகே தீவட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் பழனிசாமி, செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தர்மபுரி பகுதியில் இருந்து சேலத்தை நோக்கி வந்த மினி லாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர்.
அந்த மினி லாரியில் பொரி மூட்டைகளுக்கு நடுவே தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருப்பதை கண்டுபிடித்த போலீசார், உடனடியாக அந்த வண்டியின் டிரைவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் உடன் இருந்த மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். 
அதேநேரத்தில் பிடிபட்டவர் தீவட்டிப்பட்டி எலத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜாவின் மகன் ஜனார்த்தனன் (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் ஓசூரில் இருந்து மதுரைக்கு பொரிமூட்டைகளுக்கு நடுவில் வைத்து குட்கா மூட்டைகளை கடத்தி செல்வதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ரூ.14 லட்சம் 
இதையடுத்து மூட்டைகளில் இருந்த 2 டன் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ.14 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவர் ஜனார்த்தனனையும் கைது செய்தனர். 


Next Story