நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணியையொட்டி வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள் பொதுமக்கள் வரவேற்பு
வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்
நெல்லை:
நெல்லை-தென்காசி 4 வழிச்சாலை பணியையொட்டி மரங்களை வெட்டாமல் வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படுவதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
4 வழிச்சாலை பணி
நெல்லை -தென்காசி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி இருப்பதாலும், சாலை குறுகலாக இருப்பதாலும் 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் நெல்லை-ஆலங்குளம் இடையே ஏராளமான பழமையான மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் மரங்களை வெட்டாமல் அவற்றை வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மரங்கள் இடமாற்றம்
இந்த நிலையில் ஆலங்குளத்தில் இருந்து தென்காசி வரை 2-வது கட்டமாக 4 வழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. இதில் ஆலங்குளத்துக்கு மேற்கே மலைக்கோவில் அருகில் இருந்து சாலையோரம் உள்ள பசுமையான சிறிய மரங்கள் அனைத்தையும் இடம் மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மரத்தின் சிறிய கிளைகளை வெட்டி விட்டு, அதற்குரிய எந்திரம் மூலம் மரத்தை வேரோடு பிடுங்கி எடுத்து சாலையில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் பள்ளம் தோண்டி நடவு செய்யப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் வரவேற்பு
இதற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் பாவூர்சத்திரம் பாண்டியராஜா கூறியதாவது:-
கடந்த ஏப்ரல் மாதம் தென்காசி மாவட்ட கலெக்டராக சமீரன் இருந்தபோது, மரங்களை வெட்டாமல் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம். அப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அவ்வாறு இடம் மாற்றி அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி தற்போது எந்திரங்கள் உதவியுடன் மரங்கள் இடமாற்றம் செய்யப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல் மற்ற இடங்களிலும் சாலை விரிவாக்க பணியின்போது, மரங்களை வெட்டாமல் இடம் மாற்றி நட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story