‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பள்ளம் மூடல்; வாகன ஓட்டிகள் நிம்மதி
சென்னை பேசின்பிரிட்ஜ்-வியாசர்பாடி மார்க்கெட் மேம்பால இறக்க சாலையில் 2 இடங்களில் பள்ளங்கள் இருக்கும் செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக பள்ளம் இருந்த பகுதியில் தார்க்கலவை கொண்டு சீரமைக்கப்பட்டு உள்ளது. உடனடி நடவடிக்கையால் வாகன ஓட்டிகள் நிம்மதியும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
தற்காலிக தீர்வு கிடைத்தது
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செக்டார்-2 பிளாக் 6-ல் தனியார் பள்ளி அருகில் உள்ள மழைநீர் கால்வாயின் ஒரு பக்க தடுப்பு சுவர் பெருமழை காரணமாக இடிந்து விழுந்து ஆபத்தான சூழல் இருப்பது பற்றி ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து யாரும் அந்த கால்வாயில் தவறி விழுந்துவிடாத வகையில் தற்காலிக தீர்வாக சேதம் அடைந்த பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.
காட்சி பொருளான குடிநீர் குழாய்கள்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி 14-வது வார்டுக்குட்பட்ட குப்புசாமி நாயக்கர் தெருவில் கடந்த ஒரு வருடமாக குழாய்களில் குடிநீர் வருவதே கிடையாது. இதனால் இப்பகுதிவாசிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகிறார்கள். தெருவில் இருக்கும் அனைத்து குடிநீர் குழாய்களும் பயன்பாடின்றி காட்சி பொருளாகவே இருக்கின்றன. எங்கள் பிரச்சினை தீர வழி கிடைக்குமா?
- பொதுமக்கள், கூடுவாஞ்சேரி.
நோய் பரவும் அபாயம்
சென்னை அம்பத்தூர் மண்டலம் ஒரகடம் பகுதி குமரன் தெரு மற்றும் வ.உ.சி. தெரு சந்திக்கும் இடத்தில் குப்பைகள் மற்றும் மாட்டு சாணம் கொட்டபட்டு வருகிறது. இதனால் அப்பகுதி துர்நாற்றம் சூழ்ந்து காணப்படுவதுடன், கொசுக்களின் உற்பத்தி மையமாகவும் மாறிவிட்டது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதிவாசிகள் நலன் காக்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
- பொதுமக்கள், ஒரகடம்.
மின்வாரியம் கவனிக்குமா?
சென்னை வளசரவாக்கம் ஜெய் நகர் 2-வது தெருவில் கடந்த மாதம் 26-ந்தேதி அன்று மரம் முறிந்து விழுந்ததில் மின்கம்பம் சாய்ந்து விழுந்தது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாய்ந்த மின்கம்பம் அப்படியே கிடக்கிறது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், வளசரவாக்கம்.
சாலையோரங்களில் எரிக்கப்படும் குப்பைகள்
சென்னை செங்குன்றத்தை அடுத்த பம்மதுகுளம் ஊராட்சி வழியாக செல்லும் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, எல்லம்மன் பேட்டை, லட்சுமிபுரம் 61-ஆர் வழித்தட மாநகர பஸ் செல்லும் சாலையோரங்களில், பாலத்தின் கீழ் இருபுறமும் குப்பைகள், மருத்துவ கழிவுகள், இறந்த கால்நடைகள் போன்றவற்றை கொட்டிவிட்டு செல்வதால் சாலையில் செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகள் அடிக்கடி தீயிட்டு எரிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதை தடுத்து சாலையோரங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள், எல்லம்மன் பேட்டை.
மின்கம்பம் சேதம்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பாபுஜிநகர் 6-வது தெருவில் உள்ள மின்கம்பம் விரிசல் அடைந்து காட்சியளிக்கிறது. மின்கம்பத்தில் பெரும்பகுதியில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் தெரிகின்றன. எனவே மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பொதுமக்கள், பாபுஜி நகர்.
கழிவுநீர் தேக்கத்தால் அவதி
சென்னை பெரம்பூர் நாட்டால் கார்டன் 2-வது தெருவில் குடிசை பகுதிகளில் இருக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி இருக்கிறது. அருகேயுள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் கசிந்துகொண்டே இருக்கிறது. இதனால் துர்நாற்றம் சூழ்ந்து, சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதே பிரச்சினை பெரம்பூர் பந்தர் கார்டன் 3-வது தெருவிலும் நிலவுகிறது.
- நதியா, பெரம்பூர்.
இன்னும் வடியாத மழைநீரால் அவதி
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு நகராட்சிக்குட்பட்ட ஶ்ரீஅம்மன்நகரில் இன்னும் மழைநீர் வடியாமல் இருக்கிறது. இது போதாதென்று பாம்புகள் நடமாட்டமும் இருக்கிறது. நோய் தொற்று குறித்த அபாயத்தாலும், பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் அச்சத்தாலும் பரிதவித்து வருகிறோம்.
- பொதுமக்கள், மாங்காடு.
குட்கா விற்பனை தடுக்கப்படுமா?
காஞ்சீபுரம் மாவட்டம் சிறுகாவேரிபாக்கம் தாலுகா விநாயகபுரம் அச்சிக்கட்டு பகுதியில் உள்ள கடைகளில் மாவா, ஹான்ஸ் போன்ற தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. 500 மீட்டர் தூரத்திலேயே பள்ளிக்கூடம் இருக்கிறது. பள்ளி மாணவர்கள் வந்து செல்லும் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சமூக விரோத நடவடிக்கை தடுக்கப்படுமா? போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
- பொதுமக்கள், விநாயகபுரம்.
எரியாமல் உள்ள உயர் கோபுர மின் விளக்கு
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் மாதர்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பஸ் நிலையத்தில் அமைந்துள்ள உயர் கோபுர மின் விளக்கு சில மாதகாலமாக செயல்படாமல் இருக்கிறது. இதனால் மாலை வேளையானதுமே பஸ் நிலைய வளாகம் இருளில் மூழ்கிவிடுகிறது. பயணிகளும் சிரமத்தை அடைந்து வருகிறார்கள். செயல்படாமல் இருக்கும் இந்த உயர் கோபுர மின் விளக்கு மீண்டும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், மாதர்பாக்கம் கிராமம்.
Related Tags :
Next Story