1,010 சாலைகளை சீரமைக்க ரூ.147.18 கோடி: சென்னை மாநகராட்சி


1,010 சாலைகளை சீரமைக்க ரூ.147.18 கோடி: சென்னை மாநகராட்சி
x
தினத்தந்தி 5 Dec 2021 3:09 PM IST (Updated: 5 Dec 2021 3:09 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான 1,010 சாலைகளை சீரமைக்க ரூ.147.18 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சாலைகள் சீரமைப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. நீளமுள்ள 471 பஸ் சாலைகளும், 5 ஆயிரத்து 270 கி.மீ. நீளமுள்ள 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் பெய்த கன மழையின் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளின் மேற்புறங்களில் பள்ளங்களும், போக்குவரத்து சாலைகளில் குழிகளும் ஏற்பட்டது. ஒரு சில சாலைகள் அதிகளவு பாதிப்புக்குள்ளாகி உள்ளன.

இதையடுத்து அனைத்து மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேதமடைந்த பஸ் சாலைகள் மற்றும் உட்புற சாலைகளை கணக்கெடுப்பு செய்ய சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு முதல் கட்டமாக 622 உட்புற தார் சாலைகள், 307 உட்புற ‘கான்கிரீட்’ சாலைகள், 79 பஸ் சாலைகள் மற்றும் 2 சாலைகளில் நடைபாதைகள் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன என திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

ரூ.147.18 கோடி ஒதுக்கீடு

இந்த சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.109.60 கோடி, சிங்காரச் சென்னை 2.o திட்டத்தில் இருந்து ரூ.37.58 கோடி என மொத்தம் ரூ.147.18 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,008 சாலை பணிகளும், 2 சாலைகளில் நடைபாதை பணிகளும் என மொத்தம் 1,010 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட ஒப்பந்தம் கோரப்பட்டு உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பருவமழையின் காரணமாக சேதமடைந்த மேற்குறிப்பிட்ட சாலைகள் தவிர்த்து சேதமடைந்த பிற சாலைகளை கணக்கிடும் பணி வட்டார துணை கமிஷனர்களின் மேற்பார்வையில் சம்பந்தப்பட்ட என்ஜினீயர்களால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்த திட்ட அறிக்கை பெறப்பட்டவுடன் அடுத்த கட்டமாக சாலைகளை சீரமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்பட உள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது.

ஆய்வு செய்யப்படும்

சாலை பணிகளை மேற்கொள்ளும் போது பழைய சாலைகளை முழுவதுமாக அகழ்ந்தெடுத்து புதிய சாலை பணிகளை மேற்கொள்ளவும், ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் இணையவழி ஒப்பங்களாக மட்டுமே கோரவும், ஒப்பங்கள் இறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டு சாலை பணிகளை விரைந்து முடித்திடவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் சாலை பணிகளின் தரம் மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ள கலந்தாலோசகர்கள் கொண்டு ஆய்வு செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.


Next Story