தண்ணீருக்கு அடியில் முள்செடியில் கட்டப்பட்ட நிலையில் தொழிலாளி பிணம்


தண்ணீருக்கு அடியில் முள்செடியில் கட்டப்பட்ட நிலையில் தொழிலாளி பிணம்
x
தினத்தந்தி 5 Dec 2021 6:52 PM IST (Updated: 5 Dec 2021 6:52 PM IST)
t-max-icont-min-icon

தேசூர் அருகே மீன்பிடிக்க சென்று மாயமானவர் ஏரி தண்ணீருக்குள் இருந்த முள் செடிக்குள் கட்டிவைக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை உயிருடன் கட்டி வைத்து கொன்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேத்துப்பட்டு

தேசூர் அருகே மீன்பிடிக்க சென்று மாயமானவர் ஏரி தண்ணீருக்குள் இருந்த முள் செடிக்குள் கட்டிவைக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவரை உயிருடன் கட்டி வைத்து கொன்றார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன்பிடிக்க சென்றார்

திருவண்ணாமலை மாவட்டம் தேசூரை அடுத்த லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 43). இவர் கடந்த 3-ந் தேதி ஏரியில் மீன்பிடிக்க செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். 

பின்னர் அவர் மறுநாள் காலைவரை வீடுதிரும்பவில்லை. அவரது மனைவி தேவி ஏரி மற்றும் பக்கத்தில் உள்ள காடுகளில் சென்று தேடிப்பார்த்தார்.

 அப்போது ஏரியில் அவரது டார்ச் லைட் மற்றும் துணி இருந்தது. 
இதுகுறித்து தேசூர் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தமிழ்நாடு மாநில மலைவாழ் மக்கள் பொதுச்செயலாளர் சரவணன் தலைமையில் தேசூர் போலீஸ் நிலையம் முன்பு வந்தவாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்தார்

இந்த நிலையில் தேசூர் போலீசார் இன்று காலை தீயணைப்பு படையினருடன் சென்று ஏரியில் இறங்கி கன்னியப்பனை தேடினர். 

 திருவண்ணாமலையிலிருந்து துப்பறியும் நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் சென்று கரையோரமாகவே சுற்றி சுற்றி வந்தது. அதனால் சரவணன் ஏரிக்குள்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து தீவிரமாக தேடினர்.

அப்போது ஏரியில் உள்ள முள்வேலி மரத்தில் கன்னியப்பன், அவர் கட்டியிருந்த லுங்கியை கிழித்து  கட்டிவைக்கப்பட்டு பிணமாக இருந்தார். 

மர்ம நபர்கள் அவரை தண்ணீருக்கு அடியில் கட்டிவைத்துவிட்டு தப்பியுள்ளனர். அவரது உடலை தீயணைப்பு படையினரும், போலீசாரும் கரை மீட்டு வந்தனர். பின்னர் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை

மர்ம நபர்கள் கன்னியப்பனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. உயிருடன் தண்ணீருக்குள் கட்டி வைத்தார்களா, அல்லது கொலை செய்து கட்டிவைத்தார்களா என்பது தெரியவில்லை. 

இதுகுறித்து வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவர்மன் ஆகியோர் மேற்பார்வையில், தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமளவள்ளி, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கன்னியப்பனை மரத்தில் கட்டிவைத்து தப்பிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர்.

Next Story