வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 42 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
x
தினத்தந்தி 5 Dec 2021 8:06 PM IST (Updated: 5 Dec 2021 8:06 PM IST)
t-max-icont-min-icon

வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 42 பேர் ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

வேலூர்

வெளிநாடுகளில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு வந்த 42 பேர் ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் என்று கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேர கொரோனா கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேற்று திடீரென பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர், வேலூர் மாவட்டத்தில் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை?, மாவட்டம் முழுவதும் நேற்று மேற்கொள்ளப்பட்ட தொற்று பரிசோதனை?, இதுவரை தடுப்பூசி போட்டவர்களின் விவரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒருவாரம் தனிமை

வெளிநாடுகளில் இருந்து கடந்த 30-ந் தேதி நேற்று வரை (அதாவது நேற்று முன்தினம்) வேலூர் மாவட்டத்துக்கு 71 பேர் வந்துள்ளனர். அவர்களில் 42 பேரின் முகவரி கண்டறியப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஒருவாரத்துக்கு பின்னர் அவர்களுக்கு மீண்டும் சளிபரிசோதனை செய்யப்படும். அதில், தொற்று இல்லை என்று வந்த பின்னரே அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். 12 பேர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் பெயர், விவரம் அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 பேரின் முகவரியை கண்டறியும் பணியில் சுகாதார துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் ஒருவாரம் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். 

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. தினசரி 10 முதல் 15 பேருக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. கடந்த வாரம் ஒரேநாளில் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில், 15 பேர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் தங்கியிருந்த விடுதியின் முகவரியை அளித்துள்ளனர். இனிமேல் சிகிச்சைக்காக வேலூர் வரும் வடமாநிலத்தவரின் ஆதார் அட்டையின் முகவரியை கொரோனா பரிசோதனையின்போது பதிவு செய்யும்படி தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தடுப்பூசி போடுவதில் முன்னேற்றம்

மேலும் தங்கும் விடுதிக்கு வரும் வடமாநிலத்தவர்கள் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் காண்பித்த பின்னரே அனுமதிக்க வேண்டும். அல்லது அவர்களுக்கு அங்கு வைத்து சளிமாதிரி பரிசோதனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.

வேலூர் மாவட்ட நெடுஞ்சாலையோரம் உள்ள ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இது தொடர்பாக அவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. ஒமைக்ரான் நோய் தடுப்பு சிகிச்சைக்காக 50 படுக்கைகள் தற்போது தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்படும். 
கொரோனா தடுப்பூசி போடுவதில் வேலூர் மாவட்டம் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் கடைநிலையில் காணப்பட்ட வேலூர் தற்போது இடைநிலைக்கு உயர்ந்துள்ளது. 2 லட்சத்து 25 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. 

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

ஆய்வின்போது வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பானுமதி, வேலூர் மாநகர் நலஅலுவலர் மணிவண்ணன், நகர்புற சுகாதார டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Next Story