மீஞ்சூர், சோழவரம் ஒன்றிய பகுதிகளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல்
மீஞ்சூர், சோழவரம் ஒன்றிய பகுதிகளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சல்
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் கிராமங்கள், நகரங்கள் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. மேலும் தொடர் மழையால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. ஏற்கனவே குடியிருப்புகளில் கழிவு நீருடன் மழைநீர் கலந்து பள்ளமான இடங்களில் தேங்கியதில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது.
இதனால் மீஞ்சூர் ஒன்றியத்தில் கல்பாக்கம், ஏலியம்பேடு, பொன்னேரி, மேட்டுப்பாளையம், திருவேங்கிடாபுரம், காட்டாவூர் போன்ற கிராமங்களிலும் சோழவரத்தில் ஜனப்பன் சத்திரம், ஆண்டார்குப்பம், சோழவரம், காரனோடை போன்ற கிராமங்களிலும் காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியது.
மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வந்த நோயாளிகளை பரிசோதித்ததில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
கொசு மருந்து தெளிப்பு
பின்னர் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்பட்டு அவர்களை சுகாதார மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆலோசனையின் பேரில் பொது சுகாதார பணிகள் மூலம் ஒவ்வொரு கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் உள்ள வீடுகளில் நேரில் சென்று அங்கு சோதனை செய்து டயர், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இதர பொருட்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றி கொசு மருந்து தெளித்தும் பிளீச்சிங் பவுடர் தூவியும் புகை போக்கிகள் மூலம் மருந்துகள் தெளிப்பது போன்ற பணிகளுடன் பொதுமக்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story