அணைகள், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனை


அணைகள், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு சோதனை
x
தினத்தந்தி 5 Dec 2021 10:15 PM IST (Updated: 5 Dec 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அணைகள், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.

தேனி:
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அணைகள், பஸ் நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 
வெடிகுண்டு தடுப்பு சோதனை
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான டிசம்பர் 6-ந்தேதி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் இருக்க நாடு முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (திங்கட்கிழமை) பாபர் மசூதி இடிப்பு நாள் என்பதால் தேனி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள், அணைகள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையொட்டி தேனி மாவட்டத்தில் அணைகள், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் வெடிகுண்டு கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர். 
வெடிகுண்டு தடுப்பு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்பட பல்வேறு முக்கிய இடங்களில் மோப்ப நாய் வீரா உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும் சோதனை நடத்தினர். இதேபோல் உத்தமபாளையம், கம்பம், ஆண்டிப்பட்டி, பெரியகுளம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு சோதனை நடத்தப்பட்டது.
தமிழக-கேரள எல்லையில்...
தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லைகளான குமுளி மற்றும் கம்பம்மெட்டு மலைப்பாதையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை கம்பம்மெட்டு, குமுளி சோதனை சாவடியில் நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். 
இதேபோல் கம்பம் பழைய, புதிய பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜ், ரவிராஜா, ரமேஷ், திருப்பரங்கிரிவாசகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வெடிகுண்டு பொருட்கள் உள்ளதா? என கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவிகளை வைத்து போலீசார் சோதனை செய்தனர்.

Next Story