கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன்
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான கல்லூரி தாளாளருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி திண்டுக்கல் கோர்ட்டு உத்தரவிட்டது.
திண்டுக்கல்:
மாணவிகள் புகார்
திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியில் தனியார் நர்சிங், கேட்டரிங் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் திண்டுக்கல் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து இந்த கல்லூரிக்கு வந்து படிக்கும் பல மாணவ-மாணவிகள் கல்லூரி விடுதியிலேயே தங்கி படிக்கின்றனர்.
இந்த நிலையில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவருக்கு உடந்தையாக விடுதி வார்டன் அர்ச்சனா என்பவர் இருந்ததாகவும் கூறி 3 மாணவிகள் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
மேலும் அவர்களுக்கு ஆதரவாக மாணவ-மாணவிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து 3 மாணவிகளின் புகாரின் பேரில் 2 போக்சோ உள்பட 3 பிரிவுகளில் தாடிக்கொம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விடுதி வார்டன் அர்ச்சனாவை கைது செய்தனர். ஆனால் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தலைமறைவாகி விட்டார். பின்னர் அவர் திருவண்ணாமலை போளூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
நிபந்தனை ஜாமீன்
அதன் பின்னர் அவரை தாடிக்கொம்பு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததும் ஜோதி முருகனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பழனி சிறையில் அடைத்தனர். இதற்கிடையே மருத்துவ பரிசோதனைக்காக, சிறையில் இருந்த ஜோதிமுருகனை நேற்று முன்தினம் திண்டுக்கல்லுக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் பழனி சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஜோதிமுருகன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன், ஜோதிமுருகன் மீது தொடரப்பட்ட 2 போக்சோ வழக்குகளில் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
மேலும் அவர் தினமும் வடமதுரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். அவருடைய பாஸ்போர்ட்டை கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story