கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி


கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
x
தினத்தந்தி 5 Dec 2021 10:59 PM IST (Updated: 5 Dec 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

கொடைரோடு அருகே கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலியாகினான்.

கொடைரோடு: 

கொடைரோடு அருகே உள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் கணேசன். அவருடைய மகன் சக்தி தினேஷ் (வயது 15). இவன், பள்ளபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று சக்தி தினேஷ், பள்ளபட்டி அருகேயுள்ள அகரக்குளம் கண்மாயில் குளிக்க சென்றான். அங்கு அவன் ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினான். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.  அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் தலைமையில் படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி சக்தி தினேஷ் உடலை மீட்டனர். தண்ணீரில் மூழ்கி சக்தி தினேஷ் பரிதாபமாக இறந்தான்.
இதுபற்றி தகவலறிந்து அங்கு வந்த அம்மையநாயக்கனூர் போலீசார், அவனுடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக லட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி மாணவன் கண்மாய் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story