8-ம் வகுப்பு மாணவிக்கு கலெக்டர் பாராட்டு


8-ம் வகுப்பு மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 6 Dec 2021 12:18 AM IST (Updated: 6 Dec 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே பல்வேறு ஓவியங்கள் வரைந்து முதல்-அமைச்சரிடம் காட்டிய 8-ம் வகுப்பு மாணவியை அழைத்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பாராட்டினார்.

கோட்டூர்:
கோட்டூர் அருகே பல்வேறு ஓவியங்கள் வரைந்து முதல்-அமைச்சரிடம் காட்டிய 8-ம் வகுப்பு மாணவியை அழைத்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பாராட்டினார். 
8-ம் வகுப்பு மாணவி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் ஆதிச்சபுரம் அருகே உள்ள ஓவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி - புஷ்பா இவர்களின் மகள் ராகவி. இவர் ஆதிச்சபுரம் புனித அந்தோணியார் உயர்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி சென்று வந்து வீட்டில் இருக்கும் ஓய்வு நேரங்களில் பல விதமான ஓவியங்களை வரைந்து வந்தார். இந்த ஓவியங்களை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வந்தனர். டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த தமிழக முதல்-அமைச்சர் தங்களின் பகுதிக்கு வருவதை அறிந்த அந்த மாணவி, தான் வரைந்த ஓவியங்கள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் ஓவியம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் காண்பிக்க வேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்தார். போலீஸ் பாதுகாப்பு வளையத்தை மீறி செல்ல முடியாமல் தவித்தார். இந்தநிலையில் ஆதிச்சபுரம் பாலம் அருகில் பிரதான சாலையில் நின்று முதல்-அமைச்சரிடம் ஓவியத்தை காண்பிக்க வேண்டும் என தவிப்புடன் காத்திருந்தார்.
அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு வந்த முதல்-அமைச்சர், மாணவி ஒருவர் ஏதோ கையில் வைத்து இருப்பதை கண்டார். இதையடுத்து முதல்-அமைச்சர் வந்த கார், மாணவி ராகவி அருகே வந்து நின்றது. பின்னர் அந்த மாணவியை அழைத்து அவள் வைத்திருந்த ஓவிங்களை வாங்கி பார்த்து, ரசித்து பாராட்டினார். பின்னர் கைகொடுத்து நலம் விசாரித்து, தேவையான உதவிகளை செய்வதாக அறிவித்து சென்றார்.
கலெக்டர் பாராட்டு
தான் படிக்கும் பள்ளிக்கூடத்திற்கும் ஊருக்கும் பெருமை சேர்த்த ராகவியை பொதுமக்களும், சேவை சங்கங்களும், இளைஞர் அமைப்புகளும் பாராட்டினர். 
இந்த தகவலை கேள்விப்பட்ட திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், ராகவியை நேரில் அழைத்து ஓவியங்களை பார்த்து பாராட்டினார். அவருடைய கல்விக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்தார்.

Next Story