தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குப்பை தொட்டி வைக்கப்படுமா?
புதுக்கோட்டை கீழ 3-ம் வீதியில் வரதராஜ பெருமாள் கோவில் அருகே குடியிருப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் அந்த பகுதியில் காய்கறி சந்தையும் நடைபெறும். கோவிலுக்கும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. அப்பகுதியில் குப்பைகள் பொது இடத்தில் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அந்த இடத்தில் குப்பைகளை கொட்ட வசதியாக குப்பை தொட்டி வைக்க வேண்டும். மேலும் அவ்வப்போது முறையாக குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், புதுக்கோட்டை.
பிளாஸ்டிக் கழிவுகளால் நீர்நிலைகள் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் பேரளி ஊராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து பொதுமக்களிடம் வாங்கப்பட்டது. பெறப்பட்ட மக்காத குப்பைகளை சேகரித்து பேரளி பெரியாண்டவர் கோவில் அருகில் கட்டப்பட்டுள்ள சேமிப்பு கிடங்கில் கொட்டப்பட்டது. அவ்வாறு கொட்டப்பட்ட மக்காத குப்பைகளை கடந்த 2 ஆண்டுகளாக மறுசுழற்சி செய்யாமல் அப்படியே கிடக்கின்றது. தற்போது அங்கு கொட்டப்பட்ட மக்காத குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள் காற்றில் பறந்து அருகில் உள்ள வயல்வெளிகள் மற்றும் நீர்நிலைகளில் நிலங்களிலும் விழுகின்றது. இதனால் நீர்நிலைகள் மாசுபடுகிறது. நிலத்தடி நீர் பூமிக்குள் செல்லாமல் தடுக்கப்படுகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பேரளி, பெரம்பலூர்.
சாலையோரத்தில் சகதி
கரூர் மாவட்டம் கரூர்-சேலம், சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறையிலிருந்து தவிட்டுப்பாளையம் வரையிலும், தவிட்டுப்பாளையத்திலிருந்து பாலத்துறை வரையிலும் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தார் சாலையின் ஓரத்தில் ஏராளமான மழை நீர் தேங்கி இருக்கிறது. அதேபோல் சாலையின் ஓரத்தில் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
விஜயகுமார், தவிட்டுப்பாளையம், கரூர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரம்பலூர் மாவட்டம் , வேப்பந்தட்டை வட்டம், எறையூர் கிராமத்தில் உள்ள புதுக்குடியிருப்பு தெருவில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் இருந்துதான் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை பிடித்துச்சென்று பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் குழாய் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பள்ளம் ஏற்பட்டு, அந்த பள்ளத்தில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. இதனால் தண்ணீர் பிடிக்க முடியாமல் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
புவனேஸ்வரி, எறையூர், பெரம்பலூர்.
ஆங்கில வழி கல்வி ஏற்படுத்த வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, ராஜாளிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட முத்தக்கவுண்டன்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு சுற்றுவட்டார பகுதிகளான எல்லைகாலபட்டி, கோனார்பட்டி, பிள்ளாங்குளத்துபட்டி, பாப்பாப்பட்டி, கருக்காம்பட்டி, அருவங்காலப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வருகின்றன. இப்பள்ளியில் ஆங்கில வழி கல்வி இல்லாததால் தற்போது குறைந்த அளவில் மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், முத்தக்கவுண்டன்பட்டி, புதுக்கோட்டை.
வீணாகும் குடிநீர்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கல்லை கிராமம் பூவைப்பட்டியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பூவைப்பட்டி, கரூர்.
சேறும், சகதியுமான சாலை
திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டி அடைக்களமாதா நகர் 7வது குறுக்குதெரு 2வது வீதியில் முறையான வடிகால் வசதி மற்றும் சாலை வசதி இல்லாததால் இப்பகுதி சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், நடந்து செல்லும் பாதசாரிகளும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். முதியவர்கள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், பென்மலைப்பட்டி, திருச்சி.
குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர்
திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் திண்டுக்கல்-திருச்சி சாலையின் அடியில் குடிநீர் குழாய் பதியப்பட்டுள்ளது. இந்த சாலையின் வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த குடிநீர் குழாயில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. நகராட்சி அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுத்தும் இந்த நிலை தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போதும் இதே நிலை ஏற்பட்டு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு காலை, மாலை என இருவேளையும் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், திருச்சி.
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்கு உட்பட்ட கீழசந்தபாளையத்தில் முறையான வடிகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஆங்காங்கே தாழ்வான பகுதிகளிலும், காலி மனைகளிலும் தேங்கி நிற்கின்றன. மேலும் கழிவுநீர் கலந்துள்ளதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கீழசந்தபாளையம், திருச்சி.
எலும்பு கூடான மின்கம்பம்
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், தெற்கு துவாக்குடிமலை, சமாதானபுரத்தில் சாலையோரத்தில் மின்கம்பம் அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் அனைத்தும் உதிர்ந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. மேலும் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், சமாதானபுரம், திருச்சி.
சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்
திருச்சி கிராப்பட்டி ரெயில்வே சுரங்கப்பாதையில் தற்போது பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரெயில்வே சுரங்கப்பாதை வழியாக செல்லும் பொதுமக்கள் தற்போது அந்த வழியாக செல்ல முடியாமல் மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. முதியவர்கள் மேம்பாலத்தில் ஏறி நடந்து செல்லும்போது சிரமப்பட்டு சென்று வருகின்றனர். மேலும் தேங்கியுள்ள மழைநீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சுரங்கப்பாதையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கிராப்பட்டி, திருச்சி.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கடந்த 3-ந் தேதி நெடுஞ்சாலைத்துறையால் கடைவீதி மற்றும் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட சில பகுதிகளில் குறிப்பாக மதுரை ரோடு, பஸ் நிறுத்தத்திற்கு எதிர்புறம், கோவில்பட்டி சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மணப்பாறை, திருச்சி.
Related Tags :
Next Story