காய்கறிகள் விலை கிடு கிடு உயர்வு
காய்கறிகள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
பெரம்பலூர்:
ரூ.50-க்கு விற்ற தக்காளி...
இல்லத்தரசிகளின் சமையலறையில் காய்கறிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் இருந்து வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது.
இதனால் தினமும் உயர்ந்து வரும் பெட்ரோல்- டீசல் விலையை போல், காய்கறிகளின் விலையும் தினமும் கிடு, கிடுவென உயர்ந்து வருகிறது. பெரம்பலூரில் கடந்த வாரம் மார்க்கெட், உழவர் சந்தையில் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது விலை உயர்ந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையாகி வருகிறது.
கத்தரிக்காய்-கேரட்
இதேபோல் கத்தரிக்காய், பாகற்காய், பீர்க்கங்காய், பீன்ஸ் விலை தலா ஒரு கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.40-க்கும், கேரட், வெண்டைக்காய், மாங்காய் தலா ஒரு கிலோ ரூ.80-க்கும் விற்பனையானது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் தலா ஒரு கிலோ ரூ.40 முதல் விற்பனை செய்யப்படுகிறது.
முட்டைக்கோஸ், பீட்ரூட் தலா ஒரு கிலோ ரூ.60-க்கும், கொத்தமல்லி, புதினா கட்டு தலா ஒன்று ரூ.50-க்கும் விற்பனையானது. முருங்கைக்காய் கிலோ ரூ.240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைவிட சில்லறை விற்பனை கடைகளில் காய்கறிகள் விலை சற்று அதிகமாக விற்கப்படுகிறது.
மேலும் உயர வாய்ப்பு
கடந்த சில நாட்களில் மேற்கண்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது இல்லத்தரசிகளை கவலை அடைய செய்துள்ளது. பெரும்பாலானோர் சமையலில் தக்காளியை தவிர்த்து வருகின்றனர். பெரம்பலூரில் பல ஓட்டல்களில் தக்காளி சட்டினி நிறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் காய்கறிகள் விலை அதிகரித்த காரணத்தால், அசைவத்துக்கு மாறியுள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் காய்கறிகளின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். காய்கறிகள், சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வால் ஓட்டல்களிலும் உணவு பொருட்களின் விலை உயர்த்தப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story