நெல்லை அருகே பரிதாபம்: மின்னல் தாக்கி 2 பெண்கள் சாவு
மின்னல் தாக்கி 2 பெண்கள் சாவு
நெல்லை:
நெல்லை அருகே வயலில் களைபறிக்கும் பணியில் ஈடுபட்ட 2 பெண்கள் மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தனர். மற்றொரு பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
களைபறிக்கும் பணி
நெல்லை மேலப்பாளையம் கருங்குளம் அருகே உள்ள நடராஜபுரத்தை சேர்ந்தவர்கள் முருகன் மனைவி முத்துமாரி (வயது 35), மற்றொரு முருகன் மனைவி பாலேஸ்வரி (22), கிருஷ்ணன் மனைவி வள்ளியம்மாள் (45).
இவர்கள் 3 பேரும் மேலப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வயல்காட்டில் நேற்று மாலை களைபறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மின்னல் தாக்கி சாவு
அப்போது முத்துமாரி, பாலேஸ்வரி, வள்ளியம்மாள் ஆகியோர் மீது திடீரென்று மின்னல் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் அங்கேயே மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அந்த பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே முத்துமாரி, பாலேஸ்வரி ஆகிய 2 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். வள்ளியம்மாளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சோகம்
ஒரே பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள் மின்னல் தாக்கி பலியானதால் அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது. இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை அருகே மின்னல் தாக்கி 2 பெண்கள் பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
.............
Related Tags :
Next Story