கட்டிட பணியின்போது தவறி விழுந்த கொத்தனார் தோள்பட்டையில் குத்திய 2 அடி நீள கம்பிகள்


கட்டிட பணியின்போது தவறி விழுந்த கொத்தனார் தோள்பட்டையில் குத்திய 2 அடி நீள கம்பிகள்
x
தினத்தந்தி 6 Dec 2021 5:20 AM IST (Updated: 6 Dec 2021 5:20 AM IST)
t-max-icont-min-icon

கட்டிட பணியின்போது தவறி விழுந்த கொத்தனார் தோள்பட்டையில் குத்திய 2 அடி நீள கம்பிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

சென்னை,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 19). கொத்தனாரான இவர், காஞ்சீபுரத்தில் நேற்று முன்தினம் மாலை கட்டிட பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சென்ட்ரிங் பலகை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கண்ணன், திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சென்ட்ரிங் அடிப்பதற்காக கட்டி வைத்து இருந்த கம்பிகள் மீது விழுந்ததில், சுமார் 2 அடி நீளமுள்ள 2 கட்டுமான கம்பிகள் அவரது தோள்பட்டை பகுதியில் குத்தி, மறுபக்கமாக வெளியே வந்தது.

ரத்த வெள்ளத்தில் வலியால் அலறி துடித்த அவரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இரவு 12.30 மணி அளவில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜன் மேற்பார்வையில் டாக்டர்கள் குழுவினர் உடனடியாக அவருக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொண்டு, அறுவை சிகிச்சை செய்து சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பிறகு அவரது தோள்பட்டையில் குத்தி இருந்த 2 அடி நீளமுள்ள 2 கம்பிகளையும் அகற்றினர். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொத்தனாரின் உயிரை காப்பாற்றிய டாக்டர்கள் குழுவினரை டீன் டாக்டர் தேரணிராஜன் வெகுவாக பாராட்டினார்.

Next Story