தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் ஒமைக்ரான் சிறப்பு சிகிச்சை வார்டு
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் ஒமைக்ரான் வைரஸ் தொற்று சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி:
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 30 படுக்கைகளுடன் ஒமைக்ரான் வைரஸ் தொற்று சிறப்பு சிகிச்சை வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ்
கொரோனாவில் இருந்து உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தென் ஆப்பிரிக்கா நாட்டில் தீவிரமாக பரவி வருகிறது. இதனைத்தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில்ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்க மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரெயில்கள், பஸ்கள் மூலம் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இதில் பலர் வாரந்தோறும் சொந்த ஊருக்கு வந்து செல்கின்றனர். இதனால் கர்நாடகாவில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்குள் ஒமைக்ரான் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்ெனச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
சிறப்பு வார்டு
தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் 3-வது மாடியில் 30 படுக்கைகள் வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தலைமை மருத்துவர் குமரராஜா தலைமையில் 10 மருத்துவர்கள், 10 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள் சுழற்சி முறையில் ஒமைக்ரான் வார்டை கவனிப்பார்கள்.
இந்த நிலையில் ஒமைக்ரான் சிறப்பு வார்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகளை அரசு மருத்துவமனை உள்ளிருப்பு மருத்துவர் காந்தி மருத்துவர்களுடன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், தர்மபுரி அரசு மருத்துவமனையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது. கொரோனா வார்டில் பயன்படுத்திய 100-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டர்கள், 13 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் மற்றும் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவியும் உள்ளது என்று கூறினார். இந்த ஆய்வின்போது, ஒமைக்ரான் வார்டு தலைமை மருத்துவர் குமரராஜா மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story