மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.4 லட்சம் மாயம்; ஆட்டோவில் வந்து திருடிய 3 பேர் கைது
ஆட்டோவில் வந்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவொற்றியூர் திருமலை அவென்யூ 3-வது தெருவைச் சேர்ந்தவர் பிரகாஷ் ரெட்டி (வயது 70). இவர் ஆந்திர மாநிலம் ஓங்கோல் என்ற இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதற்காக திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த தனது நண்பர் நடராஜன் என்பவரிடம் ரூ.4 லட்சம் கேட்டார். அவரும், திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள வங்கியில் இருந்து ரூ.4 லட்சத்தை எடுத்து கொடுத்தார்.
பிரகாஷ் ரெட்டி அந்த பணத்தை தனது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துவிட்டு, அங்குள்ள கடை முன்பு நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ.4 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி திருவொற்றியூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில் பிரகாஷ் ரெட்டி வங்கியில் இருந்து பணத்துடன் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அவரை பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த 3 பேர் அந்த பணத்தை திருடிச்சென்றது தெரிந்தது. இது தொடர்பாக சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (38), சங்கர் (31), அஜித் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story