வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம்
தேவர்சோலை அருகே வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
கூடலூர்
தேவர்சோலை அருகே வீடுகளை சேதப்படுத்தி காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.
காட்டுயானைகள் அட்டகாசம்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட பாடந்தொரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வனத்துறையினர் கும்கிகள் உதவியுடன் ரோந்து செல்கின்றனர். இதன் காரணமாக காட்டுயானைகள் ஒவ்வொரு பகுதிக்கும் இடம் பெயர்ந்து செல்கின்றன.
இதற்கிடையில் மூலவயல் பகுதியில் ராஜன் என்ற தோட்ட தொழிலாளியின் வீட்டை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தின. நேற்று முன்தினம் மீண்டும் அப்பகுதிக்கு வந்து காட்டுயானைகள் மருதாயி என்பவரது வீட்டு கதவை உடைத்தன.
பீதி
மேலும் வீட்டின் பின்புறம் இருந்த கொட்டகையை சேதப்படுத்தின. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மருதாயி மற்றும் அவரது குடும்பத்தினர் பயத்தில் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு திரண்டு வந்த கிராம மக்கள் காட்டுயானைகளை விரட்டியடித்தனர். தொடர்ந்து காட்டுயானைகள் அட்டகாசம் செய்வதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
உரிய நடவடிக்கை
இதுகுறித்து மூலவயல் கிராம மக்கள் கூறியதாவது:-
ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்ட கும்கிகளை வனத்துறையினர் முதுமலையில் இருந்து அழைத்து வந்து உள்ளனர். ஆனால் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு உடனடியாக சென்று விரட்டும் பணியில் ஈடுபடுவதில்லை.
இதன் காரணமாக பொதுமக்களின் வீடுகள், விவசாய பயிர்களை தினமும் செயல்படுத்தி வருகிறது. எனவே காட்டுயானைகளிடம் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story