ரேசன் கடைகளுக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும்
வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேசன் கடைகளுக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
திருவாரூர்:
வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேசன் கடைகளுக்கு விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
பகுதி நேர ரேசன் கடை திறப்பு
திருவாரூர் அருகே இலவங்கார்குடி கிராமத்தில் புதிய பகுதி நேர ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு புதிய பகுதி நேர ரேசன் கடையினை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் 3,86,215 குடும்ப அட்டைதாரர்களுடன், 579 முழு நேர கடையாகவும், 155 பகுதிநேர கடையாகவும் என 734 நியாயவிலைக்கடைகள் மூலம் செயல்பட்டு வருகின்றன. தற்போது 1596 குடும்ப அட்டைதாரர்களை கொண்ட, இலவங்கார்குடி முழுநேர ரேசன் கடையிலிருந்து 400 குடும்ப அட்டைதாரர்களை கொண்ட இலவங்கார்குடி கிராமத்தில் புதிய பகுதி நேர ரேசன் கடை பிரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த கடை செவ்வாய்க்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாட்களில் செயல்படும்.
புதிய கட்டிடம் கட்டப்படும்
அதுமட்டுமின்றி, 1000 குடும்ப அட்டைதாரர்களுக்கு மேலுள்ள ரேசன் கடைகள் பிரிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். திருவாரூர் மாவட்டத்தில் 480 ரேசன் கடைகள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. வாடகை கட்டிடத்தில் இயங்கும் ரேசன் கடைகளுக்கும் விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும். வருகிற தை பொங்கல் திருநாளில் 20 வகையான மளிகைப்பொருட்களுடன் முழு கரும்பு ஒன்று என மொத்தம் 21 வகையான பொருட்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இதில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சித்ரா, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா, ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், இலவங்கார்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செவிலியருக்கு பாராட்டு
அதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ஊட்டசத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஊட்டசத்து தளைகள், காய்கறி விதை தளைகள், மாடி தோட்ட தளைகளை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வழங்கினார். மன்னார்குடி அரசு தலைமை ஆஸ்பத்திரி செவிலியர் வனஜா சாலை விபத்தில் படுகாயமடைந்த கருவாகுறிச்சியினை சேர்ந்த வசந்த் என்பவருக்கு முதலுதவி செய்து உயிர் காத்தமைக்காக அவரை உணவுத்துறை அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி கவுரவித்தார். இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை துறை இணை இயக்குனர் சிவகுமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் வெங்கட்ராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, உதவி கலெக்டர் பாலசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story