அம்பேத்கர் சிலைக்கு, இந்து மக்கள் கட்சியினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு
அம்பேத்கர் சிலைக்கு, இந்து மக்கள் கட்சியினர் மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வேடசந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.
வேடசந்தூர்
மாலை அணிவிக்க எதிர்ப்பு
அம்பேத்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வேடசந்தூரில் உள்ள அவரது சிலைக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதேபோல ஆதித்தமிழர் கட்சி, தமிழ்தேச மக்கள் கட்சி, பழனிபாவா மாணவர் பேரீயக்கம், தந்தை பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்தநிலையில் இந்து மக்கள் கட்சி மாநில துணைச்செயலாளர் தர்மா தலைமையில், அக்கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். ஆனால் அவர்கள் மாலை அணிவிக்க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அம்பேத்கர் சிலை முன்பு போராட்டம்
தலித் அமைப்பு தலைவர்களை இழிவாக பேசிய இந்துத்துவ அமைப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட அனுமதிக்க மாட்டோம் என்று கூறி அவர்கள் தடுத்து நிறுத்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் அம்பேத்கர் சிலைக்கு மாலை போடாமல் செல்லமாட்டோம் என்று இந்து மக்கள் கட்சியினர் அங்கேயே நின்றனர். இதனால் இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது.
வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு தலித் அமைப்பினருடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து கோஷமிட்டப்படி அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
அதன்பிறகு இந்து மக்கள் கட்சி மாநில துணைச்செயலாளர் தர்மா தலைமையில் அக்கட்சியினர், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். இந்த சம்பவத்தினால் வேடசந்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.
வத்தலக்குண்டு, நிலக்கோட்டை
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அம்பேத்கர் நினைவு தினம் வத்தலக்குண்டுவில் அனுசரிக்கப்பட்டது. இதற்கு அக்கட்சியின் நில உரிமை மீட்பு மாநில துணை செயலாளர் உலக நம்பி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் அலாவுதீன், திருமாசெழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியையொட்டி அம்பேத்கர் உருவ படத்துக்கு மலர் தூவி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், நிலக்கோட்டை நால்ரோட்டில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் போதுராசன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அம்பேத்கரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர்.
பகுஜன் சமாஜ் கட்சி
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், நத்தம் மூன்றுலாந்தர் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தொகுதி தலைவர் சுப்பிரமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் மயில்ராஜ், முத்துமாணிக்கம், துணை செயலாளர் தமிழ்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story