சாலை அமைக்காவிட்டால் ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைப்போம்
சாலை அமைக்காவிட்டால் ரேஷன் கார்டை திரும்ப ஒப்படைப்போம் என்று கலெக்டரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்
குறைதீர்க்கும் கூட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் விசாகன் தலைமையில் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் இருந்தே பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தங்களின் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர்.
வேடசந்தூர் தாலுகா கேத்தம்பட்டி ஊராட்சி வே.புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், தங்கள் கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி இல்லை. இதனால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், எங்கள் கிராமத்தில் சாலை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் எங்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை ஆகியவற்றை திரும்ப ஒப்படைப்போம் என்று தெரிவித்து இருந்தனர்.
தனியார் பள்ளி ஆசிரியை
இதேபோல் குஜிலியம்பாறையை அடுத்த சி.அம்மாபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சாலை வசதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பட்டிவீரன்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ்பாபு என்பவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் மாவட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் அருகில் ஆணிகள், இரும்பு தகடுகள் உள்ளிட்ட கூர்மையான இரும்பு துண்டுகளை போட்டுச்செல்கின்றனர்.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அதையடுத்து கன்னிவாடி அரண்மனைதெருவை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை கங்காதேவி என்பவர் தனது குழந்தையுடன் வந்து கண்ணீர் மல்க கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் என்னையும், எனது குழந்தையையும் அடித்து துன்புறுத்தி வீட்டைவிட்டு துரத்திவிட்டனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
ஆக்கிரமிப்பு
பின்னர் தாடிக்கொம்புவை அடுத்த அகரம் கஸ்துரிபாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் எங்கள் பகுதி மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஒய்.எம்.ஆர்.பட்டியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடம் ஆக்கிரமிக்கப்பட்டு அலுவலகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மேற்கண்ட மனுக்கள் உள்பட 340 மனுக்கள் கலெக்டரிடம் கொடுக்கப்பட்டன.
அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதையடுத்து மாற்றுத்திறனாளிகள் உள்பட 33 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
பின்னர் கொடைக்கானல், மேல்பள்ளம், வேடசந்தூர், கோவிலூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் 2019-20-ம் ஆண்டில் சிறந்த பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு விருது, சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
--------
(பாக்ஸ்) தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த பொதுமக்கள், அதிகாரிகள் என அனைத்து தரப்பினரிடமும் 2 தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்களா? என்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இதில் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி போடாதவர்களுக்கு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை.
Related Tags :
Next Story