கோட்டக்குப்பத்தில் மீனவர்கள் சாலை மறியல்


கோட்டக்குப்பத்தில் மீனவர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:15 PM IST (Updated: 6 Dec 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கக்கோரி கோட்டக்குப்பத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள நடுக்குப்பம் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் உள்ளன. மீன்பிடி தொழிலையே நம்பி இந்த கிராம மக்கள் உள்ளனர். சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட கடல் சீற்றம் காரணமாக மீனவ குடியிருப்புக்குள் கடல்நீர் புகுந்ததால் 2 விசைப்படகுகள் மற்றும் வீடுகள் சேதமடைந்தன.இதனால் அச்சமடைந்த  200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று காலை 9 மணியளவில் கோட்டக்குப்பம் ரவுண்டானா அருகில் அமர்ந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடல் அரிப்பை தடுக்க தூண்டில் வளைவு அமைக்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கோட்டக்குப்பம் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தூண்டில் வளைவு அமைக்க நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் அனைவரும் காலை 9.10 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இதனிடையே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பெண்கள் உள்பட 150 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story