தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை; 85 வீடுகள் சேதம்
தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 85 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 46 எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின.
தேனி:
தேனி மாவட்டத்தில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 85 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 46 எக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின.
கொட்டித்தீர்த்த மழை
தேனி மாவட்டத்தில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. அதன்பிறகு 3 நாட்கள் மழையின்றி பனிப்பொழிவு மட்டுமே இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடி, கூடலூர், உத்தமபாளையம் என மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இரவு 10 மணி அளவில் தொடங்கிய இந்த மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது. விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் மாவட்டத்தில் உள்ள கொட்டக்குடி, முல்லைப்பெரியாறு, வைகை உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
போடி, உப்பார்பட்டி, கூழையனூர், வீரபாண்டி, சின்னமனூர், உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 46 எக்டேர் பரப்பளவிலான நிலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர், சிறுதானிய பயிர்கள் நீரில் மூழ்கின. வெள்ளம் வடிந்த பின்னர் தான் பயிர் பாதிப்பு முழு விவரம் தெரிய வரும். இதேபோல் ஏராளமான வாழை தோட்டங்களிலும் குளம்போல் மழைநீர் தேங்கியது.
இந்த கனமழையால் தேனி தாலுகாவில் 11 வீடுகள், போடி தாலுகாவில் 17 வீடுகள், உத்தமபாளையம் தாலுகாவில் 42 வீடுகள், ஆண்டிப்பட்டி தாலுகாவில் 15 வீடுகள் என மாவட்டத்தில் ஒரேநாளில் மொத்தம் 85 வீடுகள் இடிந்தன. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கெடுத்தனர்.
பள்ளியை சூழ்ந்த மழைநீர்
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றது. சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் சூழ்ந்திருந்ததால் நேற்று காலை பள்ளிக்கு வந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோகிலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. குறிப்பாக உத்தமபாளையம் பழைய தாலுகா அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வரும் கிளை சிறைச்சாலை வளாகத்திற்குள் நேற்று முன்தினம் இரவு மழைநீர் புகுந்தது. இதையடுத்து அங்கிருந்த விசாரணை கைதிகள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
தேனி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லிமீட்டரில்) விவரம் வருமாறு:- ஆண்டிப்பட்டி 64, அரண்மனைபுதூர் 80.2, போடி 98.2, கூடலூர் 61.7, பெரியகுளம் 2, முல்லைப்பெரியாறு 28.8, தேக்கடி 21.6, சோத்துப்பாறை 14, உத்தமபாளையம் 93, வைகை அணை 28.2, வீரபாண்டி 128.
Related Tags :
Next Story