குடியேற முடியாமல் தவிப்பதாக ஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
குடியேற முடியாமல் தவிப்பதாக ஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்
திருப்பூர்,
அவினாசி நம்பியாம்பாளையத்தில் அரசு சார்பில் பட்டா பெற்றும் குடியேற முடியாமல் தவிப்பதாக ஆதிதிராவிட மக்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.
மாணிக்காபுரம் குளத்துக்கு தண்ணீர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முதலிபாளையம் மானூர் பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் அளித்த மனுவில், பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் மழைநீர் செல்கிறது. ஆனால் மாணிக்காபுரம் பெரிய குளத்துக்கு வாய்க்கால் மூலமாக சரியாக தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதன்காரணமாக கிளை குளமான சின்ன குளத்துக்கு நொய்யல் ஆற்று நீர் வரவில்லை.
இந்த குளத்துக்கு தண்ணீர் வராததால் சுற்றுப்புற பகுதிகளில் 500 ஏக்கர் பரப்பளவுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. சின்னகுளத்தில் தண்ணீர் தேங்கினால் மானூர், முத்துநகர், காங்கேயநாயக்கன்பாளையம், தொட்டிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதி நிலத்தடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. எனவே சின்ன குளத்துக்கு தண்ணீர் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இடம் வகை மாற்றம்
நெருப்பெரிச்சல், வாவிபாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், நெருப்பெரிச்சலில் கடந்த 1972-ம் ஆண்டு அரசு சார்பில் 5 சென்ட், 4 சென்ட் இடம் 15 பேருக்கு வழங்கப்பட்டது. அதுபோல் வாவிபாளையம் பகுதியில் கடந்த 2010-ம் ஆண்டு ½ சென்ட் அளவுள்ள இடம் 14 பேருக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த இடங்களில் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். ஆனால் நெருப்பெரிச்சலில் உள்ள இடம் மந்தைப்புறம்போக்கு என்றும், வாவிபாளையத்தில் உள்ள இடம் சந்தைப்புறம்போக்கு என்றும் ஆவணங்களில் உள்ளது.
இதன்காரணமாக வீட்டுக்கு குடிநீர் இணைப்பு, மின்சாரம், வங்கி கடன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இடத்தை நத்தம் புறம்போக்கு என்று வகை மாற்றம் செய்தால் மட்டுமே வாரிசுகளுக்கு பெயர் மாற்றம், அரசின் பலன்களை பெற முடியும். எனவே இந்த இடங்களை வகைமாற்றம் செய்து வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
பாறைக்குழி குப்பையால் பாதிப்பு
அவினாசி நம்பியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், நாங்கள் கூலி வேலை செய்து வருகிறோம். எங்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு 115 பேருக்கு ஆதிதிராவிடர் தனிதாசில்தார் மூலமாக, நம்பியாம்பாளையம் கிராமத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா தலா 3 சென்ட் வழங்கப்பட்டது. அந்த இடத்தை அளவீடு செய்து கொடுத்து குடியேற சென்றால் அப்பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். உள்ளூர் மக்களுக்கு பட்டா கொடுக்காமல் வெளியூர்வாசிகளுக்கு பட்டா கொடுத்ததால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதன்காரணமாக நாங்கள் குடியேற முடியாத நிலை தொடர்கிறது. எனவே நிலத்தை அளவீடு செய்து கொடுத்து அங்கு வீடு கட்டி குடியேற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story