சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவரை தாக்கி வழிப்பறி தப்பி ஓடிய 3 பேருக்கு வலைவீச்சு
சிதம்பரத்தில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாணவரை தாக்கி வழிப்பறி செய்து தப்பி ஓடிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்,
கரூர் மாவட்டம் காந்திகிராமம் சக்தி நகரை சேர்ந்தவர் பூபதி கண்ணன். இவரது மகன் பரணி கண்ணன் (வயது 19). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு, விடுதியில் தங்கி படித்து வருகிறார்.
விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றிருந்த பரணி கண்ணன் ரெயில் மூலம் நேற்று அதிகாலை சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது, அங்கிருந்து ஆட்டோ ஒன்றை பிடித்து விடுதிக்கு வந்தார்.
வழிப்பறி
இந்நிலையில் அவர் மறதியாக தனது ஒரு பையை ஆட்டோவில் விட்டு விட்டு விடுதிக்கு சென்றுவிட்டார். இதன் பின்னர் தான், அவருக்கு ஆட்டோவில் விட்டு வந்த பை பற்றி தெரியவந்தது.
இதையடுத்து, பரணி கண்ணன் தனது பையை எடுத்து வருவதற்காக விடுதியிலிருந்து தனது நண்பர் ஹரிஷ் என்பவருடன் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மருத்துவக் கல்லூரி வளாக கேட் அருகே சென்று கொண்டிருந்தபோது மொபட்டில் வந்த 3 பேர் அவர்களை வழிமறித்தனர். அதில் ஒருவர், பரணி கண்ணணை ஸ்குருடிரைவரால் முதுகில் தாக்கி அவர் பர்சில் வைத்திருந்த ரூ.2500 மற்றும் அவர் காதில் மாட்டியிருந்த ‘ப்ளூடூத் ஏர் போன்’ ஆகியவற்றை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.
3 பேருக்கு வலைவீச்சு
பின்னர் அங்கு வந்த மாணவர்கள், காயமடைந்த பரணி கண்ணனை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும்
இந்நிலையில் இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் செம்மலர், மாவட்ட செயலாளர் குமரவேல் ஆகியோர் கூட்டாக வெளியளிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திட வேண்டும். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story