விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட்டம்


விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:42 PM IST (Updated: 6 Dec 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் சாலாமேட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழக முதுகலை பட்டமேற்படிப்பு விரிவாக்க மையத்தில் 600-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இம்மையத்தில் நூலகம், ஆய்வகம் வசதி மற்றும் குடிதண்ணீர் வசதி, கழிவறையில் தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் இம்மையத்தில் இயக்குனர் நியமனம் செய்யப்பட்டும் அவர் இன்னும் பொறுப்பேற்காததால் நன்னடத்தை சான்றிதழ் உள்ளிட்ட எந்தவொரு சான்றிதழையும் பெற முடியவில்லை என்று மாணவ- மாணவிகள் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பாக அந்த பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்ட மேற்படிப்பு விரிவாக்க மையத்தில் மாணவ- மாணவிகள் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்பை புறக்கணித்து விட்டு போராட்டம் செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். உடனே அவர்களிடம் விழுப்புரம் தாலுகா போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களில் குறிப்பிட்ட சில மாணவர்கள் மட்டும் கலெக்டரிடம் சென்று இதுதொடர்பாக கோரிக்கை மனு கொடுத்தனர். மனுவை பெற்ற கலெக்டர் டி.மோகன், இதுகுறித்து  நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அதன் பிறகு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story