இருதரப்பினர் இடையே மோதல்; போலீசார் தடியடி


இருதரப்பினர் இடையே மோதல்; போலீசார் தடியடி
x
தினத்தந்தி 6 Dec 2021 11:12 PM IST (Updated: 6 Dec 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே அம்பேத்கர் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது

மயிலாடுதுறை:
மணல்மேடு அருகே அம்பேத்கர் உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பேத்கர் படம் வைத்து அஞ்சலிக்கு எதிர்ப்பு 
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி அவரது உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 
பஸ் நிறுத்தத்தில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையொட்டி அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இருதரப்பினர் மோதல்
இந்த நிலையில் நேற்று பட்டவர்த்தி பஸ் நிறுத்தத்தில் அம்பேத்கர் உருவப்படம் வைக்கப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்  அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு சமூகத்தினர் கற்களை வீசி தாக்கி உள்ளனர். 
இதையடுத்து இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கி கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
போலீசார் தடியடி
இதனை தொடர்ந்்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், இருதரப்பினர் மீதும் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்த மோதல் சம்பவத்தால் அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 
இந்த மோதல் சம்பவத்தில் ஒரு பெண் உள்பட ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் மற்றும்  உதவி கலெக்டர் பாலாஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். 
போலீசார் குவிப்பு
இந்த மோதல் சம்பவத்தால் பட்டவர்த்தி கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story