நகராட்சி பொறியாளர் வீட்டில ரூ.23 லட்சம், 170 பவுன் நகைகள் பறிமுதல். லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி


நகராட்சி பொறியாளர் வீட்டில ரூ.23 லட்சம், 170 பவுன் நகைகள் பறிமுதல். லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி
x
தினத்தந்தி 6 Dec 2021 11:19 PM IST (Updated: 6 Dec 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை செய்ததில் ரூ.23 லட்சம், 170 பவுன் நகை மற்றும் சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை செய்ததில் ரூ.23 லட்சம், 170 பவுன் நகை மற்றும் சொத்து பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நகராட்சி பொறியாளர்

ராணிப்பேட்டை நகராட்சியில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர் செல்வகுமார் (வயது 43). இவருக்கு சொந்தமான வீடு ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது.

இவர் ராணிப்பேட்டை நகராட்சி பொறியாளராக சுமார் 5 மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். இவர் இதற்கு முன்பு வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் இவரது வீட்டில் நேற்று காலை 8 மணி முதல் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையிலான திருவண்ணாமலை மற்றும் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார் 8 பேர் கொண்ட குழுவினர் திடீரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

செல்வகுமார் வேலூர் மாநகராட்சியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உதவி பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். அப்போது அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தொடரப்பட்டு, அந்த வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரூ.23 லட்சம், நகைகள் பறிமுதல்

நேற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணிக்கு மேலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 12 மணி நேர சோதனையில் கணக்கில் வராத ரூ.23 லட்சம், 170 பவுன்  நகைகள் மற்றும் சில கோடி மதிப்பிலான பத்திரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. 

ராணிப்பேட்டை பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்று வருவதும், அவரிடம் இருந்து கணக்கில் வராத பணம், மற்றும் நகை, பத்திரங்கள் கைப்பற்றப்பட்டதும் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு ராணிப்பேட்டை அருகே சுற்றுச்சூழல் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் பல லட்சம் ரூபாய் பிடிபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story