கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்


கல்லூரி மாணவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2021 11:27 PM IST (Updated: 6 Dec 2021 11:27 PM IST)
t-max-icont-min-icon

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்ததால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூரில் போலீஸ் விசாரணைக்கு சென்ற கல்லூரி மாணவர் மர்மமான முறையில் இறந்ததால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

கல்லூரி மாணவர் மர்ம சாவு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக நீர்கோழினேந்தல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்(வயது 22), தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் வந்தார். போலீசார் நிற்க சைகை காண்பித்தும் நிற்காமல் சென்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் விரட்டி சென்று அவரை பிடித்தனர்.
பின்னர் விசாரணைக்காக மணிகண்டனை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார். வீட்டில் திடீரென மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த நிலையில் போலீசார் தாக்கியதால் தான் கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் நேற்று முன்தினமும் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர்.

உறவினர்கள் போராட்டம்

இந்த நிைலயில் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கல்லூரி மாணவரின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அதன்பின்னர் அவரது உடலை உறவினர்களிடம் போலீசார் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவரது உறவினர்கள் மாணவரின் உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவரின் சாவுக்கு காரணமான போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவரின் சாவுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் மாணவரை இழந்து தவிக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை மாணவரின் உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்பத்திரி முன்பு உட்கார்ந்து கோஷமிட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்ததால் முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் குளிர்பதன வசதி இல்லாததால் போலீசார் பிரேத பரிசோதனை செய்த மாணவரின் உடலை குளிர்பதன பெட்டியில் வைப்பதற்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி பிணவறைக்கு அனுப்பி வைத்தனர்.

பா.ஜனதா போராட்டம்

இதற்கிடையே கல்லூரி மாணவரின் மர்ம சாவில் உரிய நீதி கிடைக்க வலியுறுத்தி முதுகுளத்தூர் பஸ் நிலையம் அருகே பா.ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில செயலாளர் சண்முகராஜா, மாவட்ட பொதுச்செயலாளர் குமார், மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஆத்மா கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அறிவுரை கூறி அனுப்பி வைத்தோம்
இந்த நிலையில் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:- சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவர் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து உள்ளனர். அவரை அறிவுரை கூறி தான் போலீசார் பத்திரமாக பெற்றோருடன் அனுப்பி வைத்து உள்ளனர். இது சம்பந்தமாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் எங்களிடம் உள்ளன. இறந்த கல்லூரி மாணவர் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்று டாக்டர் கூறி உள்ளார். இருப்பினும் அவரது சாவு குறித்த முழு விவரம் மருத்துவ ரீதியான அறிக்கை 10 நாட்களில் கிடைக்கும் என டாக்டர்கள் கூறி உள்ளனர். உயிரிழந்த கல்லூரி மாணவரின் பெற்றோர், மறுபிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story