10,500 விவசாயிகளுக்கு இடுபொருட்கள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்


10,500 விவசாயிகளுக்கு இடுபொருட்கள்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்
x
தினத்தந்தி 7 Dec 2021 12:19 AM IST (Updated: 7 Dec 2021 12:19 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் 10,500 விவசாயிகளுக்கு இடுபொருட்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

காரைக்குடி,

காரைக்குடியில் 10,500 விவசாயிகளுக்கு இடுபொருட்களை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணிமண்டபத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் ஊட்டம் தரும் காய்கறிகள் தோட்டம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.
காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி முன்னிலை வகித்தார். தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

10,500 பயனாளிகள்

நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக 10 ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு ரூ.21 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பீட்டில் ஊட்டச்சத்து தரும் காய்கறிகள் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து விருப்பம் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்கள் வழங்கப்படும்.
பொதுவாக நாடு முன்னேற்றம் பெற வேண்டுமென்றால் ஒரு துறையின் வளர்ச்சி போதாது. பல்வேறு துறைகளின் வளர்ச்சியே முன்னேற்றத்திற்கு உதவும்.

6 தடுப்பணைகள்

வேளாண்மைக்கு அடிப்படை ஆதாரமான நீர்வளத்தை பாதுகாக்க மாவட்டத்தில் நடப்பாண்டில் 6 தடுப்பணைகள் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் அனுமதி வழங்கியுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார். பின்னர் 32 பயனாளிகளுக்கு காய்கறிகள் தோட்டம் அமைப்பதற்கான இடுபொருட்களை தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் தென்னவன், தி.மு.க. நகர அவைத்தலைவர் இரா. கோ.அரசு, நகர செயலாளர் குணசேகரன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அழகுமலை மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story