ரெயில்வே மேம்பால பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு


ரெயில்வே மேம்பால பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
x
தினத்தந்தி 7 Dec 2021 12:37 AM IST (Updated: 7 Dec 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் ரூ38.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை- திண்டிவனம் சாலையில் ரூ.38.74 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

திருவண்ணாமலை - திண்டிவனம் சாலையில் புதிதாக ரெயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினர். 

இது குறித்து அமைச்சர் கூறியதாவது:- 

இந்த ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு கடந்த 2018-ம் ஆண்டு ஒப்பந்தம் கோரப்பட்டது. அதன் மூலம் ரூ.38 கோடியே 74 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு இந்த பணிகள் தொடங்கப்பட்டது. இது 2 ஆண்டுகளில் முடிக்க வேண்டும். ஆனால் காலதாமதமாகி உள்ளது.


இந்த பாலத்தை பொறுத்த வரையில் திருவண்ணாமலையின் மையத்தில் இருக்கிற ஒரு பாலம். தண்டரை ரெயில் நிலையம் முதல் திருவண்ணாமலை ரெயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் இந்த பாலம் அமைகிறது. இரவு, பகல் என்று பாராமல் பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. டிசம்பர் 30-ந் தேதிக்குள் இந்த பணிகள் முடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் முடிந்தவுடனே முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இந்த பாலத்திற்கு திறப்பு விழா நடைபெறும்.

புதிய பஸ் நிலையம்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், மக்கள் தொகை அதிகமாக உள்ள காரணத்தினாலும், அதே நேரத்தில் நகர மக்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு நகரருகில் உள்ள புறப்பகுதியில் அமைந்தால் தான் வருங்காலத்தில் பஸ் நிலையத்தினை விரிவுபடுத்தப்படும். 
பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை
அதன் அடிப்படையில் உபயோகத்தில் இல்லாத ரெயில் நிலையத்தை ஒட்டியுள்ள விவசாயத்துறைக்கு சொந்தமான டான்காப் நிறுவனத்திற்கு சொந்தமான சுமார் 6 ஏக்கர் இடம் மற்றும் அதையொட்டியுள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் இடம் என 10 ஏக்கர் இடத்தில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் சென்னைக்கு செல்லும் சாலை, வேலூர் செல்லும் சாலை, தெற்கு பகுதி சாலகளுக்கு எளிதாக செல்ல முடியும்.

எனவே, இந்த இடத்தில் புதிய மத்திய பஸ் நிலையம் அமைப்பதற்கு துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரதாப், வேலூர் கோட்ட பொறியாளர் (திட்டங்கள்) சுந்தர், உதவி கோட்ட பொறியாளர் பாபு, திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல் மற்றும் துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story