7 கடைக்காரர்களுக்கு அபராதம்


7 கடைக்காரர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 6 Dec 2021 8:21 PM GMT (Updated: 6 Dec 2021 8:21 PM GMT)

திண்டுக்கல்லில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை அனுமதித்த 7 கடைக்காரர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாநகராட்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொதுஇடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கடைகளில் அனுமதிக்க கூடாது என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கடைகளில் சோதனை நடத்தும்படி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார். அதன்பேரில் நகர்நல அலுவலர் இந்திரா தலைமையிலான அதிகாரிகள் நேற்று திண்டுக்கல்லில் திடீர் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகளில் உள்ள 35 கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு நகைக்கடையில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் நகைகள் வாங்க வந்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். மேலும் அந்த கடையில் கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்காதது தெரியவந்தது. இதையடுத்து அந்த நகைக்கடைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அதேபோல் தடுப்பூசி செலுத்தாத வாடிக்கையாளர்களை கடைக்குள் அனுமதித்த மேலும் 6 கடைக்காரர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story