மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்னென்ன?


மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்னென்ன?
x
தினத்தந்தி 7 Dec 2021 2:46 AM IST (Updated: 7 Dec 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனைக்கான நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்னென்ன? என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

மதுரை, 
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாகக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகள் என்னென்ன? என்பது பற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு கடந்த 27.1.2019 அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். அங்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி மட்டுமே நடந்துள்ளது. 
இந்தநிலையில், சமீபத்தில் நடந்த மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜா, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதற்கு, கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஆலோசனைகள் பற்றி மத்திய அரசு அளித்த பதில்கள் பின்வருமாறு:-
மதுரை எய்ம்ஸ் நிர்வாகக்குழுவின் முதல் கூட்டம் 16.7.2021 அன்று மாலை 3 மணிக்கு இணையதள வழியில் நடந்தது. மதுரை எய்ம்ஸ் தலைவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவருமான கட்டோச்சி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், 15 பேர் பங்கேற்றனர். 3 பேர் கலந்து கொள்ளவில்லை.
பணியிடங்கள்
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜப்பான் ஜைகா நிறுவனம் 82 சதவீத நிதியை வழங்கும். 18 சதவீத நிதியை மத்திய அரசு வழங்கும். 
கால விரயத்தை தவிர்ப்பதற்காக உடனடி நேர்காணல் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடங்கள் நிர்வாகப் பிரிவு, நிதிப்பிரிவு, தகவல் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பல்வேறு காலி பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தப்படும். இந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமாக ஒரு வருட காலத்திற்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எய்ம்ஸ் திட்டத்திற்கான பணியிடங்களான மருத்துவ மேற்பார்வையாளர், நிதி ஆலோசகர், பொறியியல் மேற்பார்வையாளர், மின் செயற்பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான விளம்பரங்கள் புதுச்சேரி ஜிப்மர் மூலம் வெளியிடப்படும். இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் காணொலிக்காட்சி வாயிலாக நடத்தப்படும். மேலும் ஜிப்மர் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்பொறியாளர் (கட்டுமானம்), நிர்வாக அலுவலர் ஆகியோர் பணியில் சேர்வதற்கான உத்தரவு, மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் வழங்கப்படும்.
மதுரை எய்ம்ஸ்க்கு மருத்துவ ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் போன்று 360 பணியிடங்கள் உருவாக்குவதற்கு 8.6.2021 அன்று முன்மொழிவு செய்யப்பட்டு செயல் வடிவத்தில் உள்ளது.
வங்கி கணக்கு தொடக்கம்
மதுரை எய்ம்ஸ்க்கு நிதி ஒதுக்கீடு செய்வது சம்பந்தமான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மதுரை எய்ம்ஸ்க்கு வங்கி கணக்கு புதுச்சேரி ஜிப்மரில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கி கணக்கை மதுரை எய்ம்ஸ்க்கு தனியாக நிதி அலுவலர் நியமிக்கப்படும் வரை ஜிப்மர் அதிகாரிகள் பராமரிப்பார்கள்.
எய்ம்ஸ் மருத்துவ மாணவர்களுக்காக தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்படும் கல்லூரிகள் 40 கி.மீ. தொலைவிற்குள் இருந்தால்தான் மதுரை எய்ம்ஸ் தற்காலிக கட்டிடங்களுக்கு வந்து மருத்துவ சேவைகளை பார்த்து செல்வதற்கு எளிதாக இருக்கும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மருத்துவ மாணவர்களை கொண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்க இருக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மதுரை எய்ம்ஸ் தற்காலிக கல்லூரி தொடங்கப்படாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் தமிழக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கான தற்காலிக சேர்க்கையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று முன்மொழிந்தார். தமிழக அரசுடன் விரைவில் கலந்து ஆலோசித்து இறுதி முடிவு எடுத்து மருத்துவ மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் திறப்புவிழா இன்று (7-ந்தேதி) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. ஆனால் 2015-ல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை. 22.7.2016 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட கோரக்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்று திறப்பு விழா நடைபெறும் நிலையில், 27.1.2019 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ்க்கு எப்போது திறப்பு விழா நடைபெறும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Next Story