தொப்பூர் அருகே தண்டவாளத்தில் பாறைகள் விழுவதை தடுக்க மலைப்பகுதியில் கம்பி வலை அமைப்பு


தொப்பூர் அருகே  தண்டவாளத்தில் பாறைகள் விழுவதை தடுக்க மலைப்பகுதியில் கம்பி வலை அமைப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 11:05 AM IST (Updated: 7 Dec 2021 11:05 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் அருகே பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுவதை தடுக்க மலைப்பகுதியில் கம்பி வலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுவதை தடுக்க மலைப்பகுதியில் கம்பி வலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
சரிந்து விழும் பாறைகள்
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள வே.முத்தம்பட்டி மலைப்பாதையில் சேலம்-தர்மபுரி இடையேயான ரெயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் 12-ந்தேதி அதிகாலையில் சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த யஸ்வந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பாறைகள் சரிந்து விழுந்தன. இதனால் அந்த ரெயில் பெட்டிகள் தடம்புரண்டன. 
இந்த விபத்தில் அந்த ரெயிலில் வந்த 2,348 பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதைத் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இந்த வழித்தடத்தில் மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன் பிறகும் இந்த பகுதியில் மழை காரணமாக சிலமுறை பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுந்தன.
கம்பி வலை அமைக்கும் பணி
இதையடுத்து அந்த பகுதியில் ரெயில்வே ஊழியர்கள் மூலம் ரெயில்கள் வரும் நேரங்களில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் மலைப் பகுதியில் இருந்து பாறைகள் சரிந்து விழுவதை தடுக்க கம்பி வலை அமைக்க முடிவெடுக்கப்பட்டது. இதன்படி பெங்களூரு ரெயில்வே கோட்ட நிர்வாகத்தின் மூலம் ரெயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள சுமார் 80 மீட்டர் உயரம் கொண்ட மலையில் உள்ள பாறைகளில் கம்பி வலைகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 
இதுகுறித்து ரெயில்வே அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், இந்த பகுதியில் மலையில் இருந்து பாறைகள் சரிந்து தண்டவாளத்தில் விழுவதை தடுக்கும் வகையில் கம்பி வலைகள் அமைக்கும் பணி விரைவில் முடிவடையும். இதன் மூலம் ரெயில் தண்டவாளத்தில் பாறைகள் விழுவது முழுமையாக தடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story