மில் தொழிலாளர்கள் உள்பட 9 பேர் படுகாயம்


மில் தொழிலாளர்கள் உள்பட 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Dec 2021 6:34 PM IST (Updated: 7 Dec 2021 6:34 PM IST)
t-max-icont-min-icon

அய்யலூர் அருகே வேன்-சரக்கு வேன் மோதிய விபத்தில் மில் தொழிலாளர்கள் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

வடமதுரை

அய்யலூர் பகுதியை சேர்ந்த பெண் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு, வடமதுரையில் உள்ள தனியார் நூற்பாலைக்கு வேன் ஒன்று நேற்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த வேனை, கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்த பாண்டியன் (வயது 34) என்பவர் ஓட்டி சென்றார். 

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், அய்யலூர் பேசும் பழனியாண்டவர் கோவில் அருகே தொழிலாளி ஒருவரை ஏற்றுவதற்காக வேன் நின்றது. 

அப்போது திருச்சியில் இருந்து தேனி நோக்கி பின்னால் வந்த சரக்கு வேன் திடீரென நூற்பாலை வேனின் பின்புறம் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், சாலையின் தடுப்புச்சுவர் மீது ஏறி நின்றது. 

இந்த விபத்தில் சரக்கு வேனை ஓட்டி வந்த தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்த தினேஷ் (24), அவருடன் வந்த தெய்வநாதன் (35), நூற்பாலை வேன் டிரைவர் பாண்டியன், பெண் தொழிலாளர்கள் பிரேமாவதி (41), சத்யா (31), கலாராணி (32), தேன்மொழி (18) உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

 இவர்களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story