மாணவர்களிடையே அடிக்கடி மோதல்: அரசு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்
அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடையே ஏற்படும் மோதல் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
மாணவர்களிடையே மோதல்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே வங்கனூர் கிராமத்தில் அரசினர் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் ஒரு பகுதியில் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவரை ஆண்கள் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் சிலர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இரு சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு இடையே மோதலாக வெடித்ததாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் சம்பவத்தில் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.
பெற்றோர்கள் முற்றுகை
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இருதரப்பிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது குறித்து ஆர்.கே. பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது.ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியில் மாணவர்களிடையே அடிக்கடி ஏற்படும் மோதல் சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று, தவறு செய்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததையடுத்து, பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story