கூடலூரில் தக்காளி கிலோ ரூ.100 க்கு விற்பனை


கூடலூரில் தக்காளி கிலோ ரூ.100 க்கு விற்பனை
x
தினத்தந்தி 7 Dec 2021 7:44 PM IST (Updated: 7 Dec 2021 7:44 PM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் தக்காளி கிலோ ரூ.100 க்கு விற்பனை

கூடலூர்

மழை பாதிப்பை காரணம் காட்டி கூடலூரில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆதிவாசி மற்றும் தோட்ட தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தொடர் மழை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய விளைபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட மாவட்டங்களில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை பலமடங்கு அதிகரித்துள்ளது.

 இதை தடுக்க தமிழக அரசு பசுமை அங்காடி மூலம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆனால் நீலகிரி மாவட்ட மக்களுக்கு கோவை, மைசூரு உள்ளிட்ட இடங்களில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வருகிறது. 

கர்நாடக மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் இல்லாத சூழலில் தமிழக மக்களின் தேவையை உணர்ந்து அம்மாநில வியாபாரிகள் தக்காளி விலையை நாளுக்குநாள் உயர்த்தி வருகின்றனர்.

கூடலூரில் கிலோ 100 ஆக விற்பனை

இந்த நிலையில் வெள்ளை பாதிப்பை காரணம் காட்டி கூடலூரில் தக்காளி கிலோ ரூ.100 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள கூடலூரில் தக்காளி விலை உயர்த்தி விற்கப்படுவதால் ஆதிவாசி மற்றும் தோட்ட தொழிலாளர்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கர்நாடகத்தின் எல்லையில் கூடலூர் அமைந்துள்ளது. ஆனால் தக்காளி விலை சென்னைக்கு நிகராக விற்கப்படுகிறது. இதைத்தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

வியாபாரிகள் விளக்கம்

விலை உயர்வு குறித்து காய்கறி வியாபாரிகள் தரப்பில் கூறும்போது, கர்நாடகா மாநிலம் குண்டல்பெட், மைசூரு பகுதியில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் தினமும் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் அதிகரித்து உள்ளதை உணர்ந்து கர்நாடக மொத்த வியாபாரிகள் கொள்முதல் விலை கிலோ ரூ.80 என நிர்ணயித்து வழங்குகின்றனர்.

 இதனால் அங்கு இருந்து கொண்டு வரப்படும் லாரி வாடகை உள்ளிட்ட செலவினங்களை கருத்தில் கொண்டு ரூ.100 ஆக விற்கப்படுகிறது என்று விளக்கம் அளித்தனர்.

Next Story